Breaking News

கடல்சார் குற்றங்களை எதிர்கொள்ள இலங்கை - சவூதி கடற்படை ஒத்துழைப்பு!

 கடல்சார் குற்றங்களை எதிர்கொள்ள இலங்கை - சவூதி கடற்படை ஒத்துழைப்பு!





பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), சவூதி கடற்படை (RSNF) தளபதி வைஸ் அட்மிரல் Mohammed bin Abdulrahman Al-Ghribi, அவர்களுடன் அண்மையில் உயர் மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். 


கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.


இலங்கை ஒரு தீவாக இருப்பதினால், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. இவ்வாறான பொதுவான சவால்களை உணர்ந்து, இரு தரப்பும் பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டு, இணைந்து செயல்படக்கூடிய துறைகளை அடையாளம் கண்டன.


இலங்கை பிரதிநிதிகள் குழு, சிறிய இலக்குகளை கண்டறியக்கூடிய மேம்பட்ட ரேடார் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கடல்சார் நிலவர விழிப்புணர்வை (Maritime Domain Awareness – MDA) மேம்படுத்துவதற்கும், வான்வழி கண்காணிப்பை வலுப்படுத்த ட்ரோன் திறன்களைப் பெறுவதற்கும் சவூதி ஆதரவை கோரியது. 


மேலும், இலங்கை கடற்படை கப்பல்களில் உள்ள கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதும் முன்னுரிமையாக வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், சவூதி கடற்படை கப்பல்கள் நற்பண்பு விஜயங்களுக்காக இலங்கை துறைமுகங்களை அணுகுதல், கடற்படை பயிற்சிகள் மற்றும் கப்பல் அணிவகுப்புகளில் பங்கேற்பது போன்ற வாய்ப்புகளும் ஆராயப்பட்டன. 


இவ்விடயத்தில் தொடக்கக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கத் தயார் என RSNF தளபதி தெரிவித்தார்.


நவீன அச்சுறுத்தல்களின் மாறிவரும் தன்மையை முன்னிட்டு, இலங்கை கடற்படையின் இணைய பாதுகாப்புத் திறன்களை (Cyber Security) மேம்படுத்தி, டிஜிட்டல் மற்றும் கலப்பு (Hybrid) சவால்களை எதிர்கொள்ள தேவையான ஆதரவும் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடபட்டது.


நிறுவன மட்ட உறவுகளை வலுப்படுத்தவும், எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அடையாளம் காணவும், உத்தியோகபூர்வ அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடல்கள் (Staff Level Talks) மற்றும் பரஸ்பர பயிற்சி வாய்ப்புகளை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.


இச் சந்திப்பின் போது, பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுக்க நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படவும், இருதரப்பு கடற்படை உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இரு தரப்பும் உறுதிபூண்டன.