Breaking News

வண்ணமயமான புத்தாக்கங்களுடன் உடுப்பிட்டி இளந்தளிர் முன்பள்ளி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி

வண்ணமயமான புத்தாக்கங்களுடன் உடுப்பிட்டி இளந்தளிர் முன்பள்ளி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி



யாழ்ப்பாணம் - வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு இளந்தளிர் முன்பள்ளி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி 01.08.2025 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு முன்பள்ளியில் ஆரம்பமானது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட உடுப்பிட்டி விநாயகா முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் விஜயசிறீ மேனகா அவர்கள் கண்காட்சியை நாடா வெட்டி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.


சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் பங்கேற்ற உடுப்பிட்டி சைவப்பிரகாச வைத்தியசாலையின் அதிபர் திரு என். சுதாகர் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் ஆகியோர் உள்ளிட்ட விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றினர்.


தொடர்ந்து மழலைகளின் கண்ணைக் கவரும் புத்தாக்கங்களை விருந்தினர்கள் பார்வையிட்டனர். குறிப்பாக பனை மரம் கற்பகதரு, தன்னியக்க பணமெடுக்கும் இயந்திரம், மிருகக் காட்சிசாலை, நீர்வீழ்ச்சி, அழகான வீடுகள், மருத்துவமனை, மழலைகளின் சிறிய புத்தாக்கங்கள் என பல வகையான வண்ணமயமான ஆக்கங்கள் அனைவரையும் கவர்ந்தன.


பார்வையாளர்களுக்கு தங்களின் கைவினைப் பொருள்கள் தொடர்பில் மழலை மொழியில் சிறார்கள் விளங்கப்படுத்தினர். ஆசிரியர்கள், பெற்றோர்களின் அர்ப்பணிப்பு இந்தக் கண்காட்சியில் பிரதிபலிப்பதாக கண்காட்சியை பார்வையிட்டவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.