மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது
25.10.2025 சனிக்கிழமை இரவு 10.00 மணி
மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது.
தற்போது முல்லைத்தீவுக்கு கிழக்காக 749 கி.மீ. தொலைவில் காணப்படும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 27ம் திகதி புயலாக மாற்றம் பெறும். இது வடமேற்கு மேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 28ம் இரவு அல்லது 29 காலை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ' மொந்தா' எனப் பெயரிடப்படும். இந்த பெயரினை தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது. 2025/2026 வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் உருவாகவுள்ள முதலாவது புயலாக இது அமையும்.
இந்த புயலினால் இலங்கையின் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 28.10.2025 வரை மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கரையோரப் பகுதிகளில் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. இடி மின்னல் நிகழ்வுகளும் அவ்வப்போது இடம்பெறும்.
அதே வேளை எதிர்வரும் 27.10.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த புயலினால் அடுத்த சில நாட்களில் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு நெருக்கடி நிலை உருவாகும். அதாவது எங்கள் பகுதி வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதன் முழுவதையும் இந்த புயல் உள்ளீரத்துக் கொள்ளும் என்பதனால் எதிர்வரும் 28.10.2025 முதல் 06.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காது. ஆனாலும் பருவக் காற்று காரணமாக அவ்வப்போது சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்.
- நாகமுத்து பிரதீபராஜா -

 
 
 
 
 
 
 
 
 
 
