வடக்கின் நீர்வளக் கண்காட்சி நல்லூரில் புதனன்று ஆரம்பமாகிறது
வடக்கின் நீர்வளக் கண்காட்சி நல்லூரில் புதனன்று ஆரம்பமாகிறது
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து வழங்கும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சியானது மூன்றாவது முறையாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் 02.09.2026 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
குறித்த நீர்வளக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண ஆளுநர், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், கல்வியலாளர்களும், ஆய்வாளர்களும், நீர் ஆர்வலர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்.
நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வக் குழுக்கள் பலவற்றின் ஒத்துழைப்புகளுடன் நடைபெறும் நீர்க் கண்காட்சியில் கலந்துரையாடல்கள், மாதிரிகள், பதாகைகள், ஆய்வு விபரங்கள், பரிசுப் போட்டிகள், விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்சிகள், குலுக்கல் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளன.
தொடர்ந்து 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ள மேற்படி நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் மாலை 7 மணி முதல் கருத்துரைகளும் கலை, பண்பாட்டு, பாரம்பரிய நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன.
நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பக்தர்கள் குறித்த நீர் கண்காட்சியில் பங்கேற்று வடமாகாண நீர்வளம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், அதற்கு மக்கள் கூட்டாக என்ன செய்யலாம்? போன்ற விடயங்களை அறிந்து எங்களது இன்றைய தலைமுறையினதும் எதிர்கால சந்ததியினதும் வாழ்வியலை நிலைபேறாக பாதுகாத்து கரம் கோர்த்துப் பயணிக்க வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைக்கிறார்கள்.
