Breaking News

கடந்த 24 மணிநேரத்தில் 5 கோர விபத்துக்கள்: 5 பேர் பலி..!

 கடந்த 24 மணிநேரத்தில் 5 கோர விபத்துக்கள்: 5 பேர் பலி..!



கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 


நேற்று (03) மாரவில, மீகஹதென்ன, நொச்சியாகம, கெஸ்பேவ மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 


மாரவில பொலிஸ் பிரிவில், திசேராபுரவிலிருந்து அடப்பர சந்திக்குச் செல்லும் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கேட் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார். 


மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் பெலவத்த - ஹொரவல வீதியில் 10 வீட்டுத் திட்டம் அருகே துவிச்சக்கர வண்டி ஒன்றை திடீரென வலதுபுறமாக திருப்ப முற்பட்டபோது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது. 


இதில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 


மத்தேகம, மீகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார். 


நொச்சியாகம - தல்கஸ்வெவ வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தல்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார். 


ஹொரணை - கெஸ்பேவ வீதியில் ஹொரணை திசையிலிருந்து கெஸ்பேவ நோக்கிப் பயணித்த கெப் (Cab) வண்டி, வீதியைக் கடந்த பெண் ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த பெண் பிலியந்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். 


இதேவேளை, பேருவளை பொலிஸ் பிரிவில் புனித ஆனா வீதிக்குத் திரும்பும் சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.