Breaking News

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு..!

 மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு..!


மேல் கொத்மலை


நீரேந்து பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதன் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. 


நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பேணுவதற்காக, இந்த வான் கதவு திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர். 


எதிர்வரும் நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள மழை எதிர்வுகூறல்களின் படி, தற்போது நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றில் உள்ள நீர் மட்டம் குறைக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இதற்கமைய அநுராதபுரம் மாவட்டத்தின் நாச்சதூவ, இராஜாங்கனை, தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹர, வெஹரகல மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரத்திலும் தற்போது நீர் மட்டத்தை குறைப்பதற்காக நீர் வௌியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 


எவ்வாறாயினும், இவ்வாறு விடுவிக்கப்படும் நீரின் அளவினால் தாழ் நிலப்பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். 


தற்போது வழங்கப்பட்டுள்ள எதிர்வுகூறல்களின் படி எதிர்காலத்தில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதால், இந்த நிலைமைகளை கண்காணிப்பதற்காக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் 24 மணித்தியாலங்களும் திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக அறிவூட்டல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். 


மேலும் பருவப்பெயர்ச்சி மழை தற்போது தீவிரமடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதால் இது தொடர்பில் அவதானமாக இருப்பது முக்கியம் என்றாலும், நிலவும் நிலைமைகளுக்கு அமைய இதுவரை எவ்வித ஆபத்தான நிலைமையும் ஏற்படவில்லை என பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.