வானிலை முன்னறிவிப்பு..! 13.11.2025 வியாழக்கிழமை மாலை 4.00 மணி 1. கடந்த
வானிலை முன்னறிவிப்பு..!
13.11.2025 வியாழக்கிழமை மாலை 4.00 மணி
1. கடந்த 08.11.2025 அன்று எதிர்வுகூறியபடி வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது இலங்கைக்கு தென்கிழக்காக இலங்கைக்கு அருகில் காணப்படுகிறது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 15.11.2025 வரை தொடரும்.
2. மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி எதிர்வரும் 17.11.2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் உருவாகும். அது கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நிலை கொள்ளும். இதனால் மீளவும் எதிர்வரும் 17.11.2025 முதல் 22.11. 2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
3. அதன்பின் மீளவும் எதிர்வரும் 21.11.2025 அன்று இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கருகே வங்காள விரிகுடாவில் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இது தீவிரம் பெற்று ஒரு புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த புயலினால் எதிர்வரும் 22.11.2025 வரை இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மிக கன மழை பெறும் என்பதோடு கடற்பகுதிகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் பலத்த வேகத்தில் காற்று வீசிக் கூடும். ( எனினும் இதனை எதிர்வரும் 18.11.2025 க்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும்). இந்த புயலுக்கு சென்வார் எனப் பெயரிடப்படும்.
4. இதனால் எதிர்வரும் 23.11.2025 முதல் 28.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
4. எனவே தற்போது கிடைக்கும் மழை ஒரு சில நாட்கள் தவிர்த்து எதிர்வரும் 28.11. 2025 வரை தொடரும். குறிப்பாக நவம்பர் 17 முதல் 28 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
5. ஆரம்பம் முதலே இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை சராசரியை விட சற்று அதிகமாகவே கிடைக்கும் என்று தொடர்ச்சியாகக் கூறி வருகின்றேன். இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை என்பது 2026 பெப்ரவரி வரை நீடிக்கும். ஆனால் ஒக்டோபர் மாதத்தின் இறுதியிலும் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்திலும் மழையில்லாததனால் பலர் இம்முறை வடகீழ்ப் பருவமழை பொய்த்து விட்டதாக கூறுகிறார்கள். அது ஏற்புடையதல்ல.
6. இவ்வாண்டு நவம்பர் மாதத்தின் பினனரைப்பகுதியிலும் டிசம்பர் மாதம் முழுவதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பல நாட்கள் மழை நாட்களாக இருக்கும் என்பதோடு கணிசமான அளவு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது .
7. குறிப்பாக டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இந்து சமுத்திர பகுதிகளுக்கு முக்கியமாக வங்காள விரிகுடாவிற்கு மேடன் ஜூலியன் அலைவின் வருகை அமையும் என்பதனால் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
7 அதே போல் ஜனவரி 2026 இலும் 11 நாட்கள் மழை நாட்களாக அமையும்.
8. ஆகவே இம்முறை வடகீழ்ப் பருவமழை சராசரியை விட சற்று அதிகமாகவே இருக்கும்.
-
நாகமுத்து பிரதீபராஜா-
