Breaking News

காலத்தின் கட்டாயமாக"தலைமுறை தாண்டி பழமை பேசும் பழமொழிகள்" என்கிறார் ச. அஷ்விதா ஊடகக்கற்கைகள்த் துறை யாழ்ப்பாப்பாணப்பல்கலை கழகம்

 காலத்தின் கட்டாயமாக"தலைமுறை தாண்டி பழமை பேசும் பழமொழிகள்"

என்கிறார் ச. அஷ்விதா 

ஊடகக்கற்கைகள்த் துறை 

யாழ்ப்பாப்பாணப்பல்கலை கழகம்






 எம்முடைய பண்பாட்டினை பிரதிபலிக்கும் பல்வேறு அம்சங்களும் இன்று எம்மால் பேசப்படாமலேயே அழிந்துச் செல்கின்றன. அதன் வரிசையில் எமது முன்னோர்களினால் பயன்படுத்தப்பட்டு வந்த அனுபவம் மிக்க பழமொழிகள் முதன்மை பெற்றதாக இருக்கின்றது. இவ்வாறு அழிந்து செல்லும் பண்பாட்டிற்கு புத்துயிர் அளிப்பதாக இந்தப் பழமை பேசும் பழமொழிகளின் தேடல் அமைகின்றது.

 எமது முன்னோர்களின் வழி வந்த நீண்ட கால அனுபவத்தின் வெளிப்பாடாகவே பழமொழிகள் காணப்படுகின்றன. பொதுவாக பழமொழி என்பது பழமையான+ மொழி = "பழமொழி" என அர்த்தப்படுத்தப்படுகின்றது. பழமொழிகளானது இயற்கை செழுமை மிக்ககதாகவும், மொழித் தேர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான பழமொழிகளுக்கென காணப்படும் சில தனித்துவமான அம்சங்களின் வழியாகவே இன்றும் சில சமூகங்களில் பல்வேறு வகையான அர்த்தங்களை வெளிப்படுத்தும் பல்வேறு பழமொழிகள் எமது மூதாதையர்களின் மூலமாக உயிர் பெற்று நிலைத்திருக்கின்றது, என்பதனை என்னால் மேற்கொள்ளப்பட்ட பழமொழிகள் சார்ந்த ஒரு கள ஆய்வின் மூலமாக வெளிக் கொண்டு வர முடிந்தது. இது எமது பழமை பேசும் அம்சங்களை எம் சமூகத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான ஒரு வழியாகவும் அமைந்தது.பொதுவாக

 பழமொழிகள் எனும் பொழுது அவை இசைவான ஒலிக் குறிப்புக்களையும், தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை தவிர்த்தும் பயன்படுத்தப்பட்டு வருவதனால், அன்றாட வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் இந்த பழமொழிகளின் பயன்பாடு எமக்கு தேவையானதாக அமைகின்றது. எனவே எம்முடைய சமூகத்தில் இன்று உயிர்பெற்று காணப்படும் பழமொழிகளும் அதன் வழியாக வெளிப்படுத்தப்படும் அனுபவமான தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாக இருக்கின்றது. அதற்கமைய யாழ்ப்பாணத்தின் நகர்ப்புறங்களில் உள்ள சில சமூகங்களை நோக்கி எனது இந்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக, அந்த சமூகங்களில் இருந்து வெளிவந்த பழமொழிகளானது சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டவையாகவும், அதன் பயன்பாடுகளும் சமூகத்திற்கு சமூகம் வேறுபடுத்தப்பட்டவையாகவும் இருந்ததனை என்னால் அடையாளம் காணமுடிந்தது. அது மட்டுமல்லாமல் இந்த பழமொழிகள் வெளிப்படுத்தும் அர்த்தங்களும், அவை சார்ந்த அனுபவங்களும், அதன் பின்புல கதைகளும் எனக்கு இந்த பழமொழிகள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தினை தூண்டுவதாக இருந்தது.

 அதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் கொக்குவிலை சேர்ந்த 70 வயதான மா கமலாதேவி ஓய்வு பெற்ற முன்னால் ஆசிரியர் ஒருவரின் மூலமாக இப்ப பழமொழிகளும் அதற்கான அர்த்தங்களையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.

" கற்பூர பாத்தி கட்டி உப்புற நட்டு விட்டாலும் அதன் மனம் மாறாது" என்பதற்கு அர்த்தம் கற்பூரத்தினால் பாத்தி கட்டி அதில் உப்பை இட்டு பூண்டை போட்டால் அதன் மனம் மாறாது, அதேபோல ஒருவரின் குணமானது எப்போதும் மாறாது என்ற ஒரு அருமையான விளக்கத்தினை கூறினார். மேலும்,

 "இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை " என்ற பழமொழியையும் அதன் அர்த்தம் வீட்டில் மனைவி இருந்தால் இல்லாதது எதுவும் இருக்காது. அதுவே வீட்டில் மனைவி இல்லாவிட்டால் எதுவும் இருந்தும் இல்லாதது போல என பெண்ணியத்தின் பெருமை பேசும் ஒரு பழமொழியையும் அழகான முறையில் கூறினார். இவ்வாறு இவர் ஒரு ஆசிரியராக இருந்து சில அனுபவத்திற்கு புதுமையான பழமொழிகளை கூறியிருந்தாலும், அநேகமான பழமொழிகளை மீண்டும் ஞாபகம் ஊட்டி கூறுவது இவருக்கு கடினமாக இருந்தது. என்பதனால் இவரிடம் இருந்து அநேகமான பழமொழிகளை என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

 அவரைத் தொடர்ந்து கோண்டாவிலை சேர்ந்த பரமேஸ்வரி என்ற 68 வயதுடைய முதியவர் ஒருவரை சந்தித்தபோது அவரிடம் இருந்து இவ்வாறான பழமொழிகளை பெற்றுக் கொள்ள முடிந்தது.

" ஊறா வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே" என இவர் கூறிய நகைச்சுவையான பழமொழியானது வேறொருவரின் நெய் வேறொருவரின் பொருள் என்றாலும் அதனை தன் கணவருக்கு எனும்போது அதிகளவாக கொடுப்பது என்ற அர்த்தத்தினை கூறியிருந்தார். மேலும் மனைவி தன் கணவனுக்கு சார்பாக நடந்துக் கொள்ளும் போது இந்தப் பழமொழிகளை பயன்படுத்துவதாகவும் கூறியினார். 

 அடுத்ததாக,

 "ஊரா பிள்ளை சோட்டை பாய கிளப்பின மூட்டை" என்ற பழமொழி மற்றவர்களின் பிள்ளையானது வயது வந்தால் வீட்டை விட்டு கிளம்பி விடும் என்றவாறு ஒரு அர்த்தத்தினை கூறியிருந்தார். அதாவது பிறருடைய பிள்ளைகளானது அதனுடைய வயது வரும்போது யாராக இருந்தாலும் அந்த வீட்டில் இருந்து சென்றுவிடும் என்ற அர்த்தத்தில் அமைந்திருப்பதாக கூறியிருந்தார். 

 இவை தவிர்ந்து,

" உரலில் தலையை வைத்து உலக்கைக்கு பயப்படலாமா..."?

" சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை" என பல்வேறு அர்த்தங்களை வெளிப்படுத்தும் பல்வேறு பட்ட பழமொழிகளை கூறியிருந்தனர். இந்த பழமொழிகள் எமது வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை கூறும் பழமொழிகளாக அமைய பெற்றிருந்தமை இதன் சிறப்பம்சமாக இருந்தது.

 மேலும் இந்த கள ஆய்வில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்ட பழமொழிகளின் தொகுப்பாக பெண்ணினத்தை இழிவுபடுத்தும் பழமொழிகள் சமூகத்தில் எவ்வாறு காணப்படுகின்றது என்பதாகும், அவை குறித்து பழமொழிகளை தேட முற்பட்டபோது பெண்களை இழிவுபடுத்தும் பழமொழிகள் பெரும்பாலும் அன்றைய காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட போதும் தற்போது அதனை நினைவூட்டி கூறுவது எமது மூதாதையர்களுக்கு சிரமமாக அமைந்தது என்று போதிலும் அக்கால சமூகத்தில் பெண்களை இழிவுப் படுத்திய ஒரு சில பழமொழிகளை கேட்டு அறிந்து கொள்ள முடிந்தது அதன் வரிசையில் 

 "உண்டி சிறுத்தல் பெண்டிர்கழகு"

"பூவுள்ள மங்கை பொற்கொடி போன இடமெல்லாம் செருப்படி" 

பொம்பள சிரிச்ச போச்சி புகையில விரிச்சா போச்சி "

கட்டுப்படாத பெண் சொட்டுக்கொண்டு போயிட்டு" இத்தகைய பழமொழிகள் ஆனது சமூகத்தில் ஒரு பெண் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது, என்பதனையும், உடல் ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி கூறுவதாகவும், மேலும் சமூகத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளாத போது அவர்களை தூற்றுவதாக பெண்களை இழிவுபடுத்தும் பழமொழிகள் என சமூகத்தில் பயன்படுத்த பட்டிருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான பழமொழிகள் பெண்களை இழிவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படுவது குறைவாக காணப்படுகின்ற போதிலும் ஒரு சில சமூகங்களில் பெண்களின் நடத்தைகளை நாசுக்காக கூறுவதற்கு இவ்வாறான பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

 எனவே பழமொழிகள் என்பது வெறுமனே வாய் வார்த்தையின் வெளிப்பாடாக அமையாமல் அவை பல்வேறு வகையில், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருவருடைய நடத்தை, உணர்வு, பண்பாடு கலாச்சாரம், ஒழுக்கம் என பல்வேறுப்பட்ட அம்சங்களை வெளிப்படையாக கூறுவதற்கு பயன்படுத்த பட்டதே பழமொழிகளாக அமைகின்றன. இத்தகைய பழமொழிகளானது ஆழமான அர்த்தத்தினை கொண்டு, அளவில் சிறியதாகவும் உலகின் உண்மை தன்மையை எடுத்துக் கூறுவதாகவும், மக்கள் மத்தியில் பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது என்றபோதிலும் இவற்றினை உருவாக்கியவர்கள் யார் என எவராலும் கூற முடியாது. எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒழுக்க விழுமியங்களை எடுத்து கூறும் இந்த பழமொழிகள் ஒரு தலைமுறையிலிருந்து இனொரு தலைமுறைக்கு அனுபவத்தின் வழியாக வந்த ஒரு அம்சமாகவே காணப்படுகின்றது. இவை காலத்தின் ஓட்டத்தில் பயன்படுத்தப்படுவதும், வெளிப்படுத்தப்படுவதும் குறைந்து செல்கின்றது என்றாலும், இவ்வாறான ஆவணப்படுத்தல்கள்,கள ஆய்வுகள் என ஒரு சில செயல்பாடுகள் என்பன இவற்றை எமது அடுத்த தலை முறைக்கு கடத்திச் செல்வதற்கான ஓர் அடித்தளமாக அமைகின்றது. என்பதனை என்னுடைய இந்த கள ஆய்வு எனக்கு உணர்த்தியது. எனவேதான் இது என்னை சார்ந்து மட்டுமல்லாமல், எமது சமூகம் சார்ந்தும் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில் எனது கட்டுரை அமையப்பெறுகின்றது.