அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை: யாழ்ப்பாணத்தில் பரபரப்பு!
அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை: யாழ்ப்பாணத்தில் பரபரப்பு!
யாழ்ப்பாண நகரை ஒட்டிய பிரதான வீதியில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Cut-out) இனந்தெரியாத நபர்களால் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் சபை நாகரீகமின்றி நடந்துகொள்வதாகவும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி கூட்டங்களை குழப்புவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அவர் மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்பினர் மத்தியில் கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தோற்றுவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், அவரது இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே, யாழ்ப்பாண பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அவரது 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் யாழ். அரசியல் வட்டாரத்தில் தற்போதைய பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது.
