பேவ(pave) குழுவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு 47 பரிந்துரைகள் முன்வைப்பு..!
பேவ(pave) குழுவினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு
47 பரிந்துரைகள் முன்வைப்பு..!
யாழ் மாவட்டத்தில் விளிம்பு நிலை சமுகத்தின் வாக்குரிமையை மேம்படுத்தல் மற்றும் அரசியலில் இளையோரின் பங்களிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுட்டு வருகின்ற பேவ் குழுவினரால் தேர்தல் ஆணைக்குழுவிடம் 47பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பான ஆவணமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்திடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
2026 - 2029 வரையான காலப்பகுதிக்கான மூலோபாய செயற்த்திட்ட தயாரிப்பிற்காக நாடளாவிய ரீதியில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் பொதுமக்கள் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் 19.08.2025 செவ்வாய்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், இயலாமைகளைக் கொண்ட நபர்கள் மற்றும் அவர்களுக்காக பணி செய்கின்ற நிறுவனங்கள், "பேவ்" குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரை உள்ளடக்கிய வகையில் குறித்த கலந்துரையாடலானது யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இறுதியில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பேவ் குழு உறுப்பினர்கள் சார்பில் 47 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
மீள் குடியேற்ற பகுதி மக்களுடைய வாக்குரிமையை உறுதிப்படுத்தல்,இயலாமை கொண்ட நபர்களுடைய வாக்குரிமையை இலகுபடுத்த நடவடிக்கை எடுத்தல்,திருநர் சமூகத்தின் வாக்குரிமையை உறுதிப்படுத்தல் மற்றும் திருநர்கள் தொடர்பில் தேர்தல் கால உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற 47பரிந்துரைகளை அடையாளம் கண்டு முன்மொழிந்திருந்தனர்.
மேற்படி பரிந்துரைகள் யாழ் மாவட்டத்தில் இயங்கி வருகின்ற பேவ் அமைப்பின் நான்கு பரிந்துரை முன்னெடுப்பு குழு இளைஞர்களினால்
கள அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முறையான ஓர் தேர்தல் முறைமையை உருவாக்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.