Breaking News

இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் தோல்வியே..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

 இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் தோல்வியே..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.




இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் தோல்வியே என்று அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். 


இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 38 வது ஆண்டு நிறைவையொட்டி அவர் எழுதிய அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.




இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆடி 29ம் திகதியுடன் 38 வருடங்களாகின்றன. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் தோல்வியைத் தந்தது. தமிழ் மக்களுக்கும் தோல்வியைத் தந்தது. இந்தியப் படைகள் தமிழ் மக்களினதும், சிங்கள மக்களினதும் கடுமையான எதிர்ப்பைப் பெற்று அவமானகரமாக வெளியேறியதுடன் ஒரு வகையில் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கும் காரணமாகியது. ஏட்டிக்கு போட்டியாக புலிகளை அழிக்க வேண்டும் என்ற வெறியில் இந்தியா யுத்தத்திற்கு பக்க பலமாக நின்று தனக்கு சார்பான வலுச் சமநிலையையும் சீனாவிற்கு சார்பாக திருப்பிவிட்டிருக்கிறது. இன்று சீனாவின் செல்வாக்கினை எவ்வாறு முறியடிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றது. சீனாவினை அகற்றுதல் என்ற ஒற்றை இலக்கிற்காக அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்ததும் கூட தனது இலக்கில் ஒரு அங்குலம் கூட அதனால் முன்னேற முடியவில்லை. இந்தியாவின் அணுகுமுறையை நடைமுறைப்படுத்திய சிவசங்கர் மேனன், நாராயணன் போன்ற அதிகாரிகள் கூட தற்போதைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கின்றனர்.



மறுபக்கத்தில் தமிழ் மக்களை இந்தியாவின் அணுகுமுறை பெருந்தேசிய வாதத்தின் வாயில் கொண்டு போய்விட்டிருக்கின்றது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வட - கிழக்கு இணைப்பையோ, அதிகாரங்களையோ தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க இந்தியாவால் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூட இந்தியாவிற்கு கைகொடுக்கவில்லை.

1977ஆம் ஆண்டு 5/6 பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கம் அமெரிக்காவிற்கு இலங்கையின் கதவுகளை வரையறையின்றி திறந்துவிட்டது. அமெரிக்கா தலைமையிலான அணிக்கும், சோவியத் யூனியன் தலைமையிலான அணிக்கும் இடையே உச்சகட்ட பனிப்போர் நிலவிய காலகட்டம் அது. சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பை கண்டு அஞ்சிய அமெரிக்கா அவசரம் அவசரமாக பாகிஸ்தானுடன் இராணுவக்கூட்டு ஒப்பந்தத்தைச் செய்தது. சீனாவும் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவிகளை வழங்கியது. ஏற்கெனவே சீனப் படையெடுப்பால் பலத்த அடிவாங்கிய இந்தியா தனது புகழ் பெற்ற அணிசேராக் கொள்கையைக் கைவிட்டு சோவியத் யூனியனுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்திருந்தது.

அமெரிக்கா - பாகிஸ்தான் கூட்டு இந்தியாவிற்கு அச்சத்தை கொடுத்த நிலையில் தனது வாசற்படியான இலங்கையும் அமெரிக்காவிற்கு கதவுகளை திறந்து விட்டமை இந்தியாவிற்கு பலத்த அச்சத்தை உருவாக்கியது. அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியாவிற்கு எதிரான சக்திகளான அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா, சீனா போன்றவற்றிடமிருந்து ஆயுத உதவிகளையும் இராணுவ பயிற்சிகளையும் பெற்றார்.

 

அமெரிக்கா இலங்கைக்கான தனது உதவிகளை இராணுவ, தொழில்நுட்ப இஸ்ரேலுக்கூடாகவே வழங்கியது. கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரகத்தில் இதற்காக இஸ்ரேல் நலன்புரிப் பிரிவு திறக்கப்பட்டது. இஸ்ரேலின் உதவியுடன் இலங்கையின் கடற்படை நவீன மயமாக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்டது. இஸ்ரேலின் உளவுப்பிரிவான “சின்பெற்” தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்கான போரியல் நுட்பங்களை விசேட அதிரடிப் படைக்கு வழங்கியது.


 அமெரிக்கா சிலாபத்தில் “அமெரிக்காவின் குரல்” வானொலிச் சேவையை விரிவாக்கம் செய்தது. திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களையும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்ள முயற்சித்தது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு அடிக்கடி வருகை தந்து ஆலோசனை நடாத்தினர். இந்தப் போக்கு அமெரிக்காவுடன் இரகசிய இராணுவ ஒப்பந்தத்திற்கு இலங்கை செல்லுமா? என்;ற அச்சத்தையும் இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.


 

இன்னோர் புறத்தில் பிரித்தானியாவின் கினிமினிசேவை அமைப்பின் படைநிபுணர்களும் அதிரடிப்படைகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கினர். பாகிஸ்தானின் விசேட படைப்பிரிவும் படையினருக்கு விசேட பயிற்சிகளை வழங்கியது. “கருஞ்சிறுத்தைகள்” என்ற அதிரடிப் படைப் பிரிவும் பாகிஸ்தான் ஆலோசனையில் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு இந்திய நலன்களுக்கு விரோதமான சக்திகள் இலங்கையின் காலூன்றுவது தனது தேசியப் பாதுகாப்பிற்கும், புவியியல் - கேத்திர நலன்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியா கருதியது. இந்தியத் தலையீட்டிற்கு பிரதான காரணம் இவைதான். 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை அழிவுகளும், அதன் விளைவாக தமிழ் நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்புகளும் தலையிடுவதற்கான களச் சூழலை உருவாக்கின. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் கொடுப்பது எனத் தீர்மானித்தார். இதன் நோக்கம் தமிழர்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பதல்ல. மாறாக ஜே.ஆரைப் பணியவைத்து இலங்கையை இந்தியாவின்; செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதே! 


இலங்கையைப் பணியவைப்பதற்காக தமிழ்ப் பிராமணரான கோபாலசாமி பார்த்தசாரதி மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இந்திய உளவுப்பிரிவினூடாக தமிழ் இயக்கங்களுடன் தொடர்புபட்டு ஆயுதமும், பயிற்சியும் வழங்கப்பட்டது. முதலில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் புளட் இயக்கங்களுக்கும் பின்னர் புலிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உளவுப்பிரிவைச் சேர்ந்த ஆர்.என்.ராவ், கிரிஸ்சக்சேனா, சங்கரன் நாயர் என்போரைக் கொண்ட குழுவையும் இந்திரா காந்தி உருவாக்கினார். இவ்மூவரும் இந்திராகாந்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர்.


 

இந்திரா காந்தியின் முயற்சியினால் இலங்கைப் படைகளுக்கு எதிரான இயக்கங்களின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. வல்வெட்டித்துறை நெடுங்காடு தாக்குதல், ஒட்டிசுட்டான் காவல் நிலையத் தாக்குதல், பொலிகண்டி தாக்குதல்கள், வெள்ளாங்குளத் தாக்குதல்கள், வல்வெட்டித்துறை காவல் நிலையத் தாக்குதல்கள், கரவெட்டித் தாக்குதல் என ஒரு மாதத்திலேயே பல தாக்குதல்கள் இடம்பெற்றன. ஜே.ஆர் அரசாங்கம் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது.

இந்த தீவிர சூழ்நிலையில் தான் 1984ஆம் ஆண்டு ஜப்பசிமாதம் 31ஆம் திகதி இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இதனால் முன், பின் அனுபவமில்லாத ராஜீவ் காந்தி பதவிக்கு வந்தார். இந்திராகாந்தியின் மரண நிகழ்வுக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா இந்தியாவிற்கு அடங்கிப் போவதற்கான சைகையை நேரடியாகவே ராஜீவ் காந்தியிடம் காட்டினார். இந்தியா எதிர்பார்த்ததும் இதுதான். இதன் பின்னர் இந்தியா விடுதலை இயக்கங்களை அடக்கத் தொடங்கியது. விடுதலை இயக்கங்களுக்கு அதிக விருப்பம் இல்லாத நிலையிலேயே திம்பு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. இந்திய உளவுப்பிரிவைக் கொண்டு கடுமையான அழுத்தங்கள் விடுதலை இயக்கங்களுக்கு கொடுக்கப்பட்டன. தமது பேரம் பேசும் நிலையை உயர்த்துவதற்காக இலங்கை இராணுவம் பலவீனமாகும் வரை பேச்சு வார்த்தைக்கு செல்வதை விடுதலை இயக்கங்கள் விரும்பியிருக்கவில்லை.

இந்தியாவின் இந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதற்காகவும், விடுதலைப் போராட்டத்தை ஐக்கியப்பட்ட நிலையில் முன்கொண்டு செல்வதற்காகவும் விடுதலை இயக்கங்களினால் “ஈழத்தேசிய விடுதலை முன்னணி” என்ற அமைப்பு 1984 சித்திரையில் உருவாக்கப்பட்டது.


 ஆரம்பத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஈரோஸ் என்பன இணைந்து உருவாக்கின. பின்னர் புலிகளும் அதில் இணைந்து கொண்டனர். இம் முன்னணி முதலில் இலங்கை அரசு அரசியல் தீர்வை முன்வைத்தால் தான் பேச்சுவார்த்தைக்கு செல்வது எனத் தீர்மானித்தது. ஆனால் இந்திய உளவுப்பிரிவினர் “நிபந்தனைகள் விதித்தால் நீங்கள் இந்தியாவிலிருந்து துரத்தப்படுவீர்கள்” என அச்சுறுத்தியமையினாலேயே விடுதலை இயக்கங்கள் எந்த வித நிபந்தனையுமில்லாமல் பேசச்செல்வதற்கு இணங்கின.


திம்பு மாநாடு 1985ஆம் ஆண்டு ஆடி மாதம் 8ஆம் திகதி ஆரம்பமானது. இதில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியில் இணைந்து கொண்ட இயக்கங்களைத் தவிர புளட் இயக்கமும், தமிழர் விடுதலை கூட்டணியும் பங்கு கொண்டன. அரசாங்கத்திலிருந்து அமைச்சு மட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததினால் விடுதலை இயக்கங்களிருந்தும் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. அடுத்த மட்ட உறுப்பினர்களே கலந்து கொண்டனர். விடுதலைப் புலிகள் சார்பில் முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் லோரன்ஸ் திலகரும், அன்ரன் சிவகுமாரனும் கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றுப் பேச்சின் போது யோகரத்தினம் யோகியும் இவர்களுடன் இணைந்து கொண்டார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் வரதராஜப் பெருமாளும், கேதீஸ்வரநாதனும் கலந்து கொண்டனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் முதல் சுற்றுப் பேச்சில் சாள்சும், பொபியும் கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றுப் பேச்சில் இவர்களுடன் நடேசன் சத்தியேந்திராவும் இணைந்து கொண்டார். ஈழப்புரட்சி அமைப்பின் சார்பில் மூத்த தலைவர்களான இளையதம்பி இரத்தினசபாபதியும், சங்கர் ராஜியும் பங்குபற்றினர். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பில் வாசுவாதேவாவும், சித்தாரத்தனும் பங்குபற்றினர். இவற்றிற்கு மாறுபட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். எனினும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியே பேச்சுவார்த்தை மேசையில் மேல்நிலையில் நின்றது.

அரச தரப்பின் சார்பில் அப்போதய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் சகோதரர் எச்.டபிள்யு.ஜெயவர்த்தனா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். அரச அதிகாரிகளும் சட்டத்தரணிகளுமே அதில் அங்கம் வகித்தனர். அமைச்சு மட்டத்திலிருந்து எவரும் பங்கேற்கவில்லை.

முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 1985ம் ஆண்டு ஆடி மாதம் 08ம் திகதி தொடக்கம், ஆடி மாதம் 13ம் திகதிவரை சுமார் ஆறு நாட்கள் இடம்பெற்றது. இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை 1985ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி ஆரம்பமானது.

தமிழர் தரப்பு திம்புமாநாட்டின் அரசியல் தீர்விற்கான கோட்பாட்டு அடிப்படையை முன்வைத்தது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், வடகிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் தமிழ்மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, அனைவருக்கும் பிரஜாவுரிமை என்கின்ற நான்கு அம்சக் கோரிக்கைகள் அதில் அடங்கியிருந்தன. இரண்டாவது சந்திப்பின் போது சிறீலங்கா அரசு தரப்பு தமிழ்த் தரப்பின் கோரிக்கைகளை நிராகரித்தது. திம்புப் பிரகடனத்தின் முதல் மூன்று கோட்பாடுகளையும், அவற்றிற்கு வழங்கப்பட்ட சட்டரீதியான அர்தத்ததுடன் மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், அரசாங்கத்தால் அவற்றை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. சிறிலங்காவின் இறையாண்மைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் தீமை விளைவிக்கும் என்பதாலும், ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குப் பங்கம் ஏற்படுத்துவதுடன் இந்நாட்டில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகத்தவர்களின் நலன்களுக்கும் விரோதமாக அமையும் என்ற காரணத்தால் இக் கோட்பாடுகள் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும்.



அரசாங்கப் பேச்சுக் குழுவின் விட்டுக்கொடுக்காத கடும்போக்கைத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வலுவாகக் கண்டித்தனர். திம்புக் கோட்பாடுகளை ஆதரித்து, தர்க்கரீதியான வாதங்களை முன்வைத்துப் பேசிய அவர்கள், தமிழ் மக்கள் தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள் என்பதையும், அவர்களுக்கு இனம் காணக்கூடிய, வரலாற்று ரீதியான தாயகப் பிரதேசம் உண்டு என்பதையும், எல்லாவற்றிலும் முக்கியமாக, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதையும் வலியுறுத்தினார்கள். அவர்களது விளக்கம் பின்வருமாறு அமைந்திருந்தது.

“எமது மக்களின் உறுதியான அரசியற் போராட்டங்களிலிருந்து வரலாற்று ரீதியான படிநிலை வளர்ச்சி பெற்று வடிவம் எடுத்தது தான் எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை. ஒரு பொதுவான பாரம்பரியமும், பண்பாடும், ஒரு தனித்துவமான மொழியும், தாயக நிலமும் உடையவர்கள் என்பதால், ஈழத்தமிழர்கள் அல்லது தமிழீழ மக்கள் ஒரு தேசிய இன அமைப்பைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். அத்தோடு அவர்கள் அடிமைப்பட்ட மக்கள் என்பதால், அந்நிய ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. இதன் அடிப்படையில்தான் சர்வதேசச் சட்டத்தின் முக்கிய நியமமாக சுயநிர்ணய உரிமை இன்று அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த சுயநிர்ணய உரிமையை ஆதாரமாகக் கொண்டுதான் எமது அரசியற் தகமையை நாமே நிர்ணயிக்கும் உரிமை எமக்குண்டு. அதாவது சிறீலங்கா அரசுடன் ஒன்று சேர்ந்து இணைந்து வாழ்வதா அல்லது பிரிந்து சென்று சுதந்திரமான தனியரசை நிறுவிக்கொள்வதா என்ற உரிமை எமக்குண்டு.

நாம் பிரகடனம் செய்த மூலக் கோட்பாடுகளின் அடிப்படையில் எம்முடன் பேச்சுக்களை நடத்துவதற்கு சிறீலங்கா அரச பிரதிநிதிகள் தவறிவிட்டனர். பரஸ்பரம் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோம். என சிறீலங்கா அரச பிரதிநிதிகள் ஆவணி 12ல் விடுத்த அறிக்கையில் உறுதியளித்த போதும் அவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லை. அதற்கு பதிலாக 1985ம் ஆண்டு ஆவணி மாதம் 16ம் நாள் அரச பிரதிநிதிகள் “புதிய யோசனைகள்” என்ற பெயரில் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தனர் அது முன்னைய மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஒத்ததாக இருந்தது. நாம் அதனை நிராகரித்தோம்”

 இதற்கிடையில் யுத்த நிறுத்தத்தை மீறி அரச படைகள் வவுனியாவில் மக்களை கொலை செய்தன. ஈழத்தேசிய விடுதலை முன்னணி பிரதிநிதிகளை சென்னையிலிருந்து வழிநடாத்திய அதன் தலைவர்கள் பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்புச் செய்யுமாறு கட்டளையிட்டனர். இதற்கேற்ப அவர்கள் வெளிநடப்புச் செய்யவே பேச்சுவார்;த்தை குழம்பியது.


 

பேச்சுவார்த்தை முறிவடைந்ததை இந்தியா விரும்பவில்லை. இந்திய மத்தியஸ்தராக திம்புவில் கலந்து கொண்ட றொமேஸ் பண்டாரிக்கும் ரெலோவின் பிரதிநிதி சத்தியேந்திராவிற்குமிடையில் பலத்தவாக்கு வாதமும் இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்திற்கு கோபம் தாங்கவில்லை. பாலசிங்கம், சக்தியேந்திரா, சந்திரகாசன், என்போருக்கு நாடுகடத்தும் உத்தரவு விடுக்கப்பட்டது. சக்தியேந்திரா அதற்கு முன்னரே பயணமாகியிருந்தார். பாலசிங்கமும், சந்திரகாசனும் நாடுகடத்தப்பட்டனர். தமிழ்நாடு இதனை எதிர்த்து கொந்தளித்தது. அனைத்துகட்சி ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டன. இறுதியில் இந்திய அரசு நாடுகடத்தலை வாபஸ் பெற்றது. எனினும் விடுதலை இயக்கங்கள் மீதான இந்திய உளவுப்பிரிவின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அச்சுறுத்தல்களுக்கு பணிந்தன.

இந்நிலையில் புலிகள் தனித்து விடப்பட்டனர். ஏனைய இயக்கங்களினால் தமக்கு அச்சுறுத்தல்கள் வரும் எனக் கருதி தாயகத்தில் புலிகள் இயக்கம் ஆயுதத் தாக்குதலை நடாத்தி ரெலோ இயக்கத்தை தடைசெய்தது. தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இனையும் தடைசெய்தது. புளொட் இயக்கம் தானாக ஒதுங்கிக் கொண்டது. ஈரோஸ் இயக்கத்தின் பெரும்பகுதி புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட சம்மதித்தது. ஏனையவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். விடுதலைப் போராட்டத்தை நடாத்தும் பொறுப்பை புலிகள் இயக்கம் தனித்து கையிலெடுத்தது.

இந்தச் சூழ்நிலை இந்திய அரசிற்கு மிகப் பெரும் தலைவலியாகியது. எல்லா விடயங்களையும் புலிகளுடன் மட்டும் கையாள வேண்டியிருந்தது. புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பது இலகுவானதாக இருக்கவில்லை. அவர்களைப் பணிய வைக்காமல் அடங்குவதற்கு தயாராக இருந்த சிறீலங்கா அரசினைக் கையாள முடியவில்லை. இந்நிலையில் 1986 நவம்பரில் பெங்களுரில் சார்க் உச்சிமாநாட்டின் போது புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிற்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்த இந்திய அரசு முயற்சித்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தீர்வுத்திட்டம் ஒன்றினை முன்வைக்க இதன் போது நிர்ப்பந்திக்கப்பட்டார். கிழக்கு மாகாணத்தை மூன்று துண்டுகளாக பிரிக்கும் திட்டத்தை ஜே.ஆர் முன்வைத்தார். தாயகத்தை கூறு போடும் திட்டத்தை பிரபாகரன் ஏற்க மறுத்தார். இந்தியாவின் முயற்சி தோல்வியடைந்தது. பெங்களுருக்கு பிரபாகரனை அழைத்துச் சென்ற போதும் இந்திய முயற்சி கைகூடவில்லை.

புலிகள் மீதான இந்தியாவின் கோபம் உச்சத்திற்கு சென்றது. புலிகளைப் பணியவைப்பதற்காக அவர்களின் தொலைத் தொடர்புக் கருவிகள் அனைத்தையும் பறித்தது. இதனை எதிர்த்து பிரபாகரன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கினார். தமிழகம் கொந்தளித்தது. இறுதியில் தொலைத் தொடர்புக் கருவிகளை பிரபாகரனின் காலடியில் வைத்த பின்னரே பிரபாகரன் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.

இதன்பின்னர் இந்தியாவில் தங்கி நிற்பது போராட்டத்திற்கு இடைஞ்சலைக் கொடுக்கும் எனக் கருதி பிரபாகரன் தாயகம் திரும்பினார். இது புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியாவின் செயல்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தது. மறுபக்கத்தில் இந்தச் சூழலைப் பயன்படுத்தி புலிகள் இயக்கத்தை அழிக்கும் வகையில் சிறீலங்கா அரசு ஒப்பிறேசன் லிபறேசன் என்ற பெயரில் வடமராட்சி தாக்குதலை நடாத்தியது. தன்னுடைய பிடி நழுவிப்போகும் என்பதற்காக இந்தியா இத்தாக்குதலை விரும்பவில்லை.

சிறீலங்கா அரசினைப் பணிய வைப்பதற்காக உணவு இராஜதந்திரத்தை இந்தியா கையிலெடுத்தது. உணவுப் பொருட்கள் கப்பல் மூலம் வடபகுதிக்கு அனுப்ப முயற்சிக்க சிறீலங்கா கடற்படை கடலில் தடுத்தது. இந்தியா விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை யாழ்ப்பாணத்தில் போட்டது. இதன் மூலம் தெளிவான சைகை சிறீலங்கா அரசிற்கு காட்டப்பட்டது.


 “படையெடுப்பை சந்திக்க வேண்டி வரும்” என்பதே அச் சைகை. ஜே.ஆர் உடனடியாகவே பணிந்தார்.

இப்பணிவைப் பயன்படுத்தி விடுதலை இயக்கங்களை விடுத்து தானே சிறீலங்கா அரசுடன் ஒப்பந்தம் செய்ய இந்திய அரசு தயாரானது. எப்படியாவது ஒப்பந்தம் செய்து இந்திய நலன்களுக்கு எதிரான சக்திகளை இலங்கையிலிருந்து கலைப்பதே நோக்கம். இலங்கை - இந்திய ஒப்பந்தம் வரைபு தயாரிக்கப்பட்டது. இதற்கு புலிகளை சம்மதிக்க வைப்பது தான் இந்தியாவிற்கு இருந்த மிகப் பெரிய சவால்.

ஒப்பந்தம் பற்றி எதுவும் கூறாமலே ராஜீவ்காந்தி தீர்வுத்திட்டம் பற்றி பிரபாகரனுடன் கதைக்க விரும்புகின்றார் எனக் கூறப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து புதுடில்லிக்கு பிரபாகரன் 1987ம் ஆண்டு ஆடி மாதம் 23ம் திகதி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அசோக் விடுதியில் பிரபாகரனும் அவரது குழுவினரும் சிறைவைக்கப்பட்டனர். அவரது வெளித்தொடர்பு உட்பட தொலைபேசித் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.


இலங்கைக்கான இந்தியத் தூதுவர் டிக்சிற் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கான நகலை பிரபாகரன் முன்வைத்தார். ஒப்பந்த நகல் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை சிபார்சு செய்தது. வட-கிழக்கு நிரந்தாரமாக இணைக்கப்படவில்லை. மாகாண சபையின் அதிகாரங்கள் செயற்பாடுகள் பற்றி தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. ஆயுதக்களைவு ஏற்பாடுகள் ஏற்றதாக இருக்கவில்லை. இதனால் தமிழ் மக்களின் அபிலாசைகளை ………………….  

“தீர்க்க முடியாத இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது” எனப் பிரபாகரன் கூறினார். “ஏற்காவிட்டால் உங்களை இங்கு தடுப்புக்காவலில் வைப்போம்” என டிக்சிற் மிரட்டினார். “விரும்பினால் தடுப்புக்காவலில் வையுங்கள் நாங்கள் ஏற்க மாட்டோம்” எனக் கூறினார் பிரபாகரன். கோபம் கொப்பளிக்க டிக்சிற் தனது சுங்கானை பிரபாகரனுக்கு காட்டியவாறு “இந்தச் சுங்கானை நான் பற்றவைத்து புகைத்து முடிப்பதற்குள் இந்தியப் படைகள் உங்கள் படைகளை துவம்சம் செய்து விடும்” என்றார். பிரபாகரன் ஏளனச் சிரிப்புடன் “முடிந்ததைச் செய்து பாருங்கள்” என்றார். கொதிப்படைந்த டிக்சிற் “மிஸ்டர் பிரபாகரன் இத்துடன் நான்காவது தடவையாக இந்தியாவை ஏமாற்றியுள்ளீர்கள்” என்றார். அதற்கு பிரபாகரன் “அப்படியானால் நான்கு தடவைகள் இந்தியாவிடமிருந்து எமது மக்களை காப்பாற்றியிருக்கிறேன்” என்றார். பிரபாகரன். டிக்சிற் ஆத்திரத்துடன் எழுந்து வெளியே சென்று விட்டார். இந்தியப்படைகள் அவமானத்துடன் இலங்கையை விட்டு வெளியேறிய போது கவிஞர் காசிஆனந்தன் “டிக்சிற் சுங்கானில் இன்னமும் புகைத்து முடிக்கவில்லை” என நக்கலாக கூறியிருந்தார்.

 பிரபாகரனை மிரட்டிப் பணியவைக்க முடியாது என அறிந்த இந்திய வெளிவிவகார அதிகாரிகள் எம்.கே.நாராயணன், சகாதேவ் பூரி போன்றவர்கள் மென்மையான முறையைக் கையாள முயற்சித்தனர். அதற்கும் பிரபாகரன் இடம் கொடுக்கவில்லை. அடுத்த முயற்சியாக எம்.ஜி.ஆர் மூலம் பிரபாகரனை இணங்கச் செய்வதற்காக அவரை அழைத்து வந்தனர். பிரபாகரன் மிக விரிவாக ஒப்பந்த குறைபாடுகளை எம்.ஜி.ஆருக்கு விளக்கினார். எம்.ஜி.ஆர் அதனை ஏற்றுக் கொண்டு “உங்கள் நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருங்கள் நான் உங்களோடு இருப்பேன்” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

இறுதியில் ஒப்பந்த தினத்திற்கு முதல்நாள் ஆடி 28 ஆம் திகதி நள்ளிரவு ராஜீவ்காந்தியை சந்திக்க பிரபாகரனை அழைத்துச் சென்றனர். ராஜீவிடம் ஒப்பந்தக் குறைபாடுகளை விபரமாக முன்வைக்கும் படி பாலசிங்கத்தை வேண்டினார் பிரபாகரன். இது பற்றி பாலசிங்கம் பின்வருமாறு கூறுகின்றார். “முதலில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புப் பற்றி மிகச் சுருக்கமான கண்டன ஆய்வை முன்வைத்தேன். மிகவும் இறுக்கமான, நெகிழ்த்த முடியாத விதிகளைக் கொண்ட அரசியல் யாப்பு பெரும்பான்மையினரின் நலன்களைப் பேணும் வகையில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் யாப்பின் கீழ், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் மத்தியில் அர்த்தபூர்வமான முறையில் அதிகாரப்பகிர்வு செய்வது இயலாத காரியம் என விளக்கினேன்”

பரந்த நிறைவேற்று அதிகாரங்களையுமுடைய ஜனாதிபதியை அரச அதிபராகக் கொண்ட ஒரு இறுக்கமான ஒற்றையாட்சி அரசை சிறீலங்காவில் அரசியல் யாப்பு உருவாக்கம் செய்துள்ளது. இந்த அரசியலமைப்பில் அரச நிர்வாக அதிகாரங்கள் அனைத்துமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியான ஒற்றறையாட்சி யாப்பை இந்திய - இலங்கை ஒப்பந்தம் நிபந்தனையின்றி முழுமையாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, நியாய பூர்வமாக அதிகாரப் பகிர்வு செய்யும் வகையில் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றம் செய்வது சாத்தியமற்றது எனச் சுட்டிக் காட்டினேன்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபையின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் நிர்வாகத் துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை. ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இந்த மாகாண சபை மேலும் திருத்தியமைத்து மேம்பாடு செய்யலாமென ஒப்பந்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளின் பல குறைபாடுகள் உள்ளதென சுட்டிக்காட்டி எமது இயக்கம் ஏற்கனவே அதனை நிராகரித்துள்ளது என்பதையும் பாரதப்பிரதமருக்கு எடுத்துரைத்தேன்.

தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சனையைப் பொறுத்தமட்டில் தமிழரின் நில உரிமை மிகவும் முக்கியமானது. இலங்கை தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட தொடர்ச்சியான நிலப்பரப்பில் பெரும்பான்மையான தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம், அவர்களது பாரம்பரிய தாயக நிலம், இந்தத் தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்த திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதையும் ரஜீவ் காந்தியிடம் எடுத்துரைத்தேன். வட கிழக்கு மாகாணங்கள் தனித்தவொரு நிர்வாகப் பிரதேசமாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டிருப்பது ஒரு ஆக்கபூர்வமான சாதனை. ஆயினும் இந்த இணைப்பு தற்காலிகமானது. இதன் நிரந்தர இணைப்பு பொதுசன கருத்து வாக்கெடுப்புக்கு விடப்படடிருப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏனென்றால், வாக்கெடுப்பில் சிங்கள முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக இணைப்பை எதிர்த்து வாக்களித்தால் வட கிழக்கு நிரந்தரமாக பிளவு படுவதுடன், தமிழ் தாயகம் காலப் போக்கில் சிதைந்துவிடும் என விளக்கினேன். பொறுமையுடன் மௌனமாக எனது கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர், அவ்வப்போது குறிப்புக்களை எடுத்தார்.

மாகாண சபைக்கு வழற்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கம் மிகவும் வரையறுக்கப்பட்டது என்றும், அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை. என்றும் விளக்கினேன். “வடகிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிடும் ஆற்றல் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவார் என நாம் நம்பவில்லை” என்று கூறினார் பிரபாகரன்.