Breaking News

ஒரு சோகம் : ஒட்சிஜன் இல்லாது காணாமல் போன வானொலி!!!

 ஒரு சோகம் : ஒட்சிஜன் இல்லாது காணாமல் போன  

வானொலி!!! 




நாட்டில் இயங்கி வந்த 'தமிழ்' வானொலியொன்று மூடப்பட்டுள்ளது. 


இந்த அபாயத்தை இனி தொடர்ச்சியாக - வானொலித் துறை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.


YouTube, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சிக்கு - ஈடுகொடுத்து நிற்க வேண்டிய கடுமையான நிலை வானொலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 


பாட்டுக் கேட்க வேண்டுமென்றால் - விரும்பிய பாடலை, விரும்பிய நேரத்தில் கேட்கும் வசதியை YouTube உள்ளிட்ட பல தளங்கள் தருகின்றன. விடையாட்டுச் செய்திகள் வேண்டுமா? சமூக ஊடகங்களில் நேரடியாகவே ஒளிபரப்பாகின்றன.


 தகவல்களைப் பெறுவதற்கும், சிரித்து மகிழ்வதற்கும் Reels நிறைந்து கிடக்கின்றன. அப்படியென்றால், வானொலி எதற்கு? நாம் ஏன் வானொலிகளைக் கேட்க வேண்டும்?


இலங்கையில் தனியார் தமிழ் வானொலித் துறையில் பெரும் ஆரவாரத்தை - சூரியன் fm வானொலியின் துவக்கம் ஏற்படுத்தியது.


 அந்த வானொலிக்கான நிகழ்ச்சிகள் தொடக்கம் Jingles வரை கட்டமைத்தவர் 'நடா அண்ணா' என்கிற - மறைந்த நடராஜசிவம் அவர்கள். 


சூரியன் வானொலியின் நிகழ்ச்சிக் கட்டமைப்புகளை, அனைத்து தமிழ் வானொலிகளும் கொப்பியடித்தன.


 இலங்கையின் மூத்த வானொலி - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'தென்றல்' வானொலியும் சூரியனைக் கொப்டியடிக்கத் தொடங்கியது.


 'வர்த்தக சேவை'க்கு 'தென்றல்' என்கிற பெயர் சூட்டப்பட்டதே, சூரியனின் பாதிப்பால்தான். 


இப்போது சூரியன் ஆரம்பிக்கப்பட்டு 27 வருடங்கள் கடந்து விட்டன.


 ஆனால், சூரியனில் நடா அண்ணா கட்டமைத்த நிகழ்ச்சிகள்தான் இன்று வரை ஓடிக் கொன்டிருக்கின்றன.


 அவ்வப்போது - நிகழ்ச்சியின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன. மற்றைய தமிழ் வானொலிகளின் நிலையும் இதுதான்.


இன்னொரு வகையில் சொன்னால் நமது தமிழ் வானொலிகள் அனைத்துக்கும் 'கிழடு' தட்டி விட்டது. 


இங்கு 'கிழடு' என்பதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பழைய பாடலை ஒலிபரப்பும் ஒரு வானொலி இளமையாகவும், புத்துணர்வுடன் இருக்க முடியும்.  


நமது தமிழ் வானொலிகள் 'அப்டேட்' ஆகவில்லை. சமூக ஊடகங்களின் அசுர வளர்ச்சியுடன் மல்லுக்கு நிற்பதற்கும், அவற்றை முந்துவதற்குமான நிலையில் நமது தமிழ் வானொலிகள் இல்லை. 


இந்த நிலையின் காரணமாக, வானொலியின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. நட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் எந்த நிறுவனத்தையும் அதன் உரிமையாளர் கட்டியணைத்துக் கொண்டிருக்க மாட்டார். கடை தொடர்ந்தும் நட்டத்தில் ஓடினால் - அதனை மூடுவதுதான் இறுதித் தீர்வாக அமையும்.


எனவே, வானொலித்துறை அடுத்த பாய்ச்சலொன்றுக்குத் தயாராக வேண்டும். பாட்டுக் கேட்பதற்கு தொலைபேசி அழைப்பு எடுக்கும் நேயர்களும், அவர்களிடம் "சாப்பிட்டாச்சா, என்ன கறி என்று கேட்கிற"அறிவிப்பாளர்களும் காற்றலையில் புதைக்கப்பட வேண்டும். 


இருக்கின்ற நிகழ்ச்சிகளைச் - செய்வதற்காக இனி உழைப்பதில் எந்தப் பயனும் இல்லை. இல்லாத ஒரு நிகழ்ச்சியை உருவாக்குவதற்காக உழைக்க வேண்டும். அந்த நிகழ்ச்சி, இப்போதுள்ள சமூக ஊடகங்களுக்குச் சவாலாக இருக்க வேண்டும்.