யு.என்.டி.பியினால் நடத்தப்படும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு!
யு.என்.டி.பியினால் நடத்தப்படும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு!
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தால் (யு.என்.டி.பி.) நடத்தப்படும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (25.07.2025) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணம் சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான இடம். பல முதலீட்டாளர்கள் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்காக வருகின்றனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உலக வங்கி உட்கட்டுமான அபிவிருத்திகளுக்கு எங்களுக்கு உதவ இருக்கின்றது.
வெளிவிவகார வளத்திணைக்களம் (ஈ.ஆர்.டி.) வழங்கிய வழிகாட்டுதலுடன், எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக யு.என்.டி.பி. நிறுவனத்தால் இந்த முயற்சி சாத்தியமானது. இந்த செயல்முறை முழுவதும் காட்டப்பட்ட ஈடுபாடு மற்றும் அக்கறைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
எமது பிராந்தியத்தில் நிலையான சுற்றுலாவின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததற்காகவும், இந்த முயற்சிக்கு வழங்கப்பட்ட பரிசீலனைக்காகவும் அதிமேதகு ஜனாதிபதிக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயற்கை நேயச்சுற்றுலாவை வளர்க்கும், எமது இயற்கை மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் மற்றும் மாகாண மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் ஒரு விரிவான திட்டத்தை வடிவமைக்க இந்த முயற்சி உதவும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். வடக்கு மாகாணத்தில் சுற்றுலாவுக்கு ஒரு துடிப்பான, நிலையான எதிர்காலத்துக்கு வழி வகுக்க இந்தத் தருணத்தைப் பயன்படுத்துவோம் என ஆளுநர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து யு.என்.டி.பி. நிறுவனத்தின் நிபுணர்கள் தமது மதிப்பீடு தொடர்பான முடிவுகளைத் தெரியப்படுத்தினர். அதனடிப்படையில் மிக நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. எவ்வாறு இதை நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
ஏனைய மாகாணங்கள் போர்க்காலங்களிலும் சுற்றுலாத்துறைக்கான அடிப்படைக் கட்டுமானங்களைக் கொண்டிருந்த நிலையில் துரதிஷ;டவசமாக வடக்கு மாகாணம் அவ்வாறானதொரு ஏதுநிலைகளைக் கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், தற்போது தயாரிக்கப்படும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், யு.என்.டி.பி. நிறுவனப் பிரதிநிதிகள், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பிரதிநிதி, நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியத்தின் தலைவர், வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களப் பிரதிநிதிகள், தொல்பொருள் திணைக்களப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.