Breaking News

நேற்றைய (27) வலி வடக்கு பிரதேசசபை

நேற்றைய (27) வலி வடக்கு பிரதேசசபை



 கன்னி அமர்வில் கருத்துத் தெரிவித்த தவிசாளர்! வலி. வடக்கு பிரதேசத்தில் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் மக்கள் குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். இதில் பல சபை உறுப்பினர்கள் கூட தமது சொந்த இடத்திற்குத் திரும்பாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதுடன் அதன் பின்னர் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் பொறுப்புள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மீள்குடியேற்ற அமைச்சினால் 182 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. அது சபையினால் மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படாமை போன்ற தவறினால் உபயோகப்படுத்தப்படாமலுள்ளது. தற்போது சபையை பொறுப்பெடுத்துள்ளதால் அதனை விரைவுபடுத்தப்படவேண்டிய தேவைப்பாடுள்ளது. இவற்றுடன் மாகாண விசேட அபிவிருத்தி நிதியத்தினூடாகவும் சபையினுடைய வரவுசெலவுத்திட்ட நிதியூடாகவும் செய்யப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் பல உள்ளன. இவற்றுடன் உடனடியாக காங்கேசன்துறையில் நூலகத்தையும் பிரதேச சபைக்குரிய தலைமை அலுவலகத்தையும் அமைக்க வேண்டிய தேவையுள்ளது. 2024 ம் ஆண்டு மார்ச் 22 ம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளிலிருந்து இதுவரை வேலி அகற்றப்படவில்லை. மீள் குடியேற்றத்திற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டாலும் குறித்த பிரதேசத்தினுள் மக்கள் செல்ல முடியாத நிலை தொடர்லதால் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாதுள்ளதுடன் மக்களுக்கான மின் இணைப்பை பெறுவதற்கும் கூட இராணுவ பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட வேண்டிய தேவையுள்ளது. இதனை அகற்றுமாறு புதிய இராணுவத் தளபதியிடம் வட மாகாண ஆளுநரும் கோரிக்கையை முன்வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக மயிலிட்டியிலும் காணி விடுவிப்புக்கான போராட்டம் நடைபெற்றது அது போல காணிகளை மீட்க சாதகமான விடயங்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள், வருமானம் ஈட்டும் மூலங்கள் மற்றும் ஆலயங்கள் என்பவற்றை மீட்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் . எனத் தெரிவித்தார்.