Breaking News

நல்லூர் ஆலயச்சூழலில் அமைக்கப்பட்ட சட்டவிரோத அமைப்புகள் தொடர்பில் தமிழ்ச் சைவப்பேரவையினர் ஆளுநரை சந்தித்தனர்..!

 நல்லூர் ஆலயச்சூழலில் அமைக்கப்பட்ட சட்டவிரோத அமைப்புகள் தொடர்பில் தமிழ்ச் சைவப்பேரவையினர் ஆளுநரை சந்தித்தனர்..!



நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சுற்றாடலில் அனுமதியின்றி இயங்கி வரும் பன்னாட்டு உணவக நிறுவனம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்கள் தொடர்பில் விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களைச் சந்தித்த தமிழ்ச் சைவப்பேரவையினர் தமது கோரிக்கைகளைத் தெளிவுபடுத்திய மனுவை இன்று சனிக்கிழமை (24.05.2025) வழங்கினர்.


ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, மத புனிதப்பரப்புகளின் பராமரிப்பு, அறநெறிக் கல்வியின் கட்டாயப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விவாதம் நடைபெற்றது.


முதற்கட்டமாக, யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நல்லூர் ஆலயச்சூழலில் மதுபானக் கிளப்புகள், கேளிக்கை நிலையங்கள் மற்றும் சர்வதேச உணவகங்கள் போன்ற அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது எனக் கோரப்பட்டது. இந்தப் பகுதி "சிவபுண்ணியப் பிரதேசம்" என விரைவில் மாநகர சபை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வேண்டுமெனவும், இதே போன்று மற்ற உள்ளூராட்சி மன்றங்களும் தமது ஆளுகைக்குட்பட்ட ஆலயப் பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ஆளுநர் வழிகாட்ட வேண்டும் எனவும் பேரவையினர் வலியுறுத்தினர்.


மேலும், பன்னாட்டு நிறுவனம் என்ற பெயரில் நல்லூரில் அமைக்கப்பட்ட உணவகம், எந்தவொரு அனுமதியும் இன்றி செயற்படுவது திட்டமிட்ட நடவடிக்கையெனக் குறித்த பேரவையினர், இதற்கு யாழ். மாநகர சபையின் அலுவலர்கள் தொடர்புடையார்களா என்பதையும் விசாரிக்க வேண்டியது அவசியம் எனக் கூறினர். எனவே, உரிய விசாரணைக்குழு அமைத்து சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டது.


இதனுடன், இளைய சமுதாயத்தின் மதநெறி வளர்ச்சிக்காக அறநெறிக் கல்வியை கட்டாயமாக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டது.

 14 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்து தனியார் கல்விச் செயற்பாடுகளும் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும், அறநெறி வகுப்புகளை கட்டாயக் கல்வியின் ஒரு பகுதியாக சேர்த்திடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பேரவையினர் வலியுறுத்தினர்.


சில பாடசாலைகளில் சைவச் சின்னங்களை அணிந்துச் செல்வதை மாணவர்களுக்கு தடை செய்வது போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதை உண்மைத்தன்மையுடன் ஆளுநரிடம் சுட்டிக்காட்டிய பேரவையினர், இவை தொடர்பிலும் உடனடி நடவடிக்கைகள் தேவை எனக் கூறினர்.


இதற்குப் பதிலளித்த ஆளுநர் 

நா.வேதநாயகன், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் சீராக ஆராயப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.


இச்சந்திப்பு மதநம்பிக்கைகள், கலாசார மரபுகள் மற்றும் சமூகவழிநடத்தலின் பாதுகாப்புக்கான முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.