வெள்ளத்தையும் வென்ற காதல்: முழங்கால் அளவு நீரில் மிதந்த தேவாலயத்தில் நெகிழ்ச்சித் திருமணம்
வெள்ளத்தையும் வென்ற காதல்: முழங்கால் அளவு நீரில் மிதந்த தேவாலயத்தில் நெகிழ்ச்சித் திருமணம்!
பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் கனமழை மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்குக்கு மத்தியிலும், இளம் ஜோடி ஒன்று முழங்கால் அளவு வெள்ள நீரில் மூழ்கியிருந்த கத்தோலிக்க தேவாலயத்தில் தங்களது திருமணத்தை நடத்தி முடித்துள்ளது.
மணிலாவின் வடக்கே புலக்கான் மாகாணம், ஹாகோனோய் பகுதியில் அமைந்துள்ள புனித யோவான் பாப்திஸ்தார் தேவாலயத்தில் செப்டம்பர் 1-ஆம் திகதி லெயான் லீசா கலாங் மற்றும் கில்பர்ட் சிக்கோ ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.
வெள்ளப்பெருக்கு அதிகரித்து வந்ததால் திருமணத்தை ஒத்திவைக்குமாறு பங்குத்தந்தை அறிவுறுத்தியிருந்த போதிலும், அதனை ஏற்க மறுத்த மணமக்கள் திட்டமிட்டபடியே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி 15-க்கும் குறைவான நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பங்கேற்புடன் எளிய முறையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன.மணமகள் லெயான், வெள்ள நீரில் நடப்பதற்கு ஏற்றவாறு தனது நீண்ட திருமண ஆடையை மாற்றியமைத்திருந்தார்.
மேலும், தேவாலயத்தை அடையும் வரை ஆடை நனையாமல் இருப்பதற்காக உயர்த்தப்பட்ட ரிக்ஷா வாகனத்தைப் பயன்படுத்தியிருந்தார். பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணங்களில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் பெய்த கடுமையான தென்மேற்கு பருவமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த இயற்கை அனர்த்தங்களால் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
