Breaking News

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த ஆரையம்பதி இளைஞர் ஜிஜானந் – ‘மிஸ்டர் ஈஸ்டர்ன் 2026’ பட்டம் வென்று சாதனை!

 மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த ஆரையம்பதி இளைஞர் ஜிஜானந் – ‘மிஸ்டர் ஈஸ்டர்ன் 2026’ பட்டம் வென்று சாதனை!




கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற ‘மிஸ்டர் ஈஸ்டர்ன் 2026’ ஆண் கட்டழகன் தெரிவுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம், ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை ஜிஜானந் முதலிடத்தைப் பெற்று ‘மிஸ்டர் ஈஸ்டர்ன் 2026’ பட்டத்தை தனதாக்கியுள்ளார்.


கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்வு, கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். பசால் தலைமையில் நேற்று (30) காத்தான்குடி பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.


கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், தனது சிறப்பான உடற்கட்டமைப்பு, நீண்டகால பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் கிருஷ்ணபிள்ளை ஜிஜானந் முதலிடத்தைப் பெற்று கிழக்கு மாகாணத்தின் சிறந்த ஆண் கட்டழகனாக தெரிவு செய்யப்பட்டார்.


ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஜிஜானந், கடந்த சுமார் 15 ஆண்டுகளாக உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டழகுத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதுடன், தனது இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டுள்ளார்.


அத்துடன், தனது கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையின் ஒரு பகுதியாக சுமார் ஐந்து ஆண்டுகள் பாடசாலையில் அரச உடற்கல்வி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். எனினும், உடற்கட்டழகுப் போட்டிகளில் பங்கேற்பதிலும், உடற்பயிற்சித் துறையிலும் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்து, தனது கனவை நோக்கி முழுநேரமாக பயணிக்கத் தீர்மானித்துள்ளார்.


‘மிஸ்டர் ஈஸ்டர்ன் 2026’ பட்டத்தை வென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கிருஷ்ணபிள்ளை ஜிஜானந்,


“உடற்கட்டழகுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு பயிற்சி மற்றும் உணவு உள்ளிட்டவற்றுக்காக அதிகளவு செலவுகள் ஏற்படுகின்றன. பொருளாதார ரீதியான சவால்கள் இருந்தபோதிலும், எனது இலட்சியத்தை கைவிடாமல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்.


எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடைபெறும் உடற்கட்டழகுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெறுவதே எனது இலட்சியமாகும். அதற்குத் தேவையான பயிற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பொருளாதார ரீதியான ஆதரவு அவசியமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மண்ணிலிருந்து கிழக்கு மாகாணத்தின் ‘மிஸ்டர் ஈஸ்டர்ன் 2026’ பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள கிருஷ்ணபிள்ளை ஜிஜானந், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்பதே அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


‘மிஸ்டர் ஈஸ்டர்ன் 2026’ பட்டத்தை வென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த கிருஷ்ணபிள்ளை ஜிஜானந்திற்கு Kattankudy.lk சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


#MrEastern2026 #Bodybuilding #Batticaloa #Arayampathy #EasternProvince #EasternBodybuilding #Sports #SriLankaBodybuilding #Kattankudy #KattankudyLK #ProudBatticaloa #Champion #Fitness #Bodybuilder #Achievement #Congratulations