சுருக்குவலை ஏற்றிய ITAK பிரதேச சபை உறுப்பினரின் வாகனம், வலைகள் கைப்பற்றல்; உதவியாளர் கைது!
சுருக்குவலை ஏற்றிய ITAK பிரதேச சபை உறுப்பினரின் வாகனம், வலைகள் கைப்பற்றல்; உதவியாளர் கைது!
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலைகளுடன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருக்கு சொந்தமான பட்டா ரக வாகனம் மற்றும் வலைகள் கடற்படையினரால் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரது உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரன் என்பவருக்குச் சொந்தமான வாகனமே இவ்வாறு இன்று அதிகாலை 3:30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளது.
சமீபகாலமாக வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக மீனவர்களாலும் பொதுமக்களாலும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து, கடற்படையினர் நேற்றும் இன்றும் கடற்கரையோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போதே இந்த சொகுசுப் பட்டா வாகனமும் சுருக்குவலைகளும் சிக்கியுள்ளன.
கைப்பற்றப்பட்ட பட்டா ரக வாகனம், சட்டவிரோத சுருக்குவலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட வாகன உதவியாளர் ஆகியோர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் வடமராட்சி மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
