தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து!
பூ.லின்ரன்
(வடமராட்சி, பச்சிளைப்பள்ளி நிறுவர்)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து!
தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவு செய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்:
"தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ஒரு புதுமுக அரசியல் கட்சியாகப் புரட்சிகரமான பிரவேசத்தை ஆரம்பித்து, பல்வேறு நெருக்கடிகளையும் சோதனைகளையும் கடந்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
தமிழக மக்கள் உங்களுக்கு வழங்கியுள்ள இந்த ஆணையை, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும் அர்ப்பணிப்புடன் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
குறிப்பாக, ஈழத்தமிழர்களாகிய எமது வாழ்வுரிமை மற்றும் அரசியல் அபிலாசைகள் குறித்து நீங்கள் கொண்டுள்ள தெளிவான நிலைப்பாட்டினை நாம் கூர்ந்து கவனித்து வருகிறோம். தொப்புள்கொடி உறவுகளான எமது மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கான பயணத்திலும், சர்வதேச அரங்கில் எமக்கான நீதியைப் பெற்றுத்தரும் முயற்சியிலும், உங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்னின்று ஒத்துழைப்பு வழங்கும் என ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். தங்களின் இந்த புரட்சிகரமான புதிய பயணம் வெற்றியளிக்க இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்
