Breaking News

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் தொடர்பான 2ஆம் கட்ட முன்னாயத்த கலந்துரையாடல்..!

 வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் தொடர்பான 2ஆம் கட்ட முன்னாயத்த கலந்துரையாடல்..!



முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் உட்சவத்தை முன்னிட்டு 2 ஆம் கட்ட திட்டமிடல் கலந்துரையாடல் இன்றைய தினம்(14.05.2026) முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய அன்னதான மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது.


எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள பொங்கல் உட்சவத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.


வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருகைதந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பொங்கல் உட்சவம் நடைபெறவுள்ள நாளன்று போக்குவரத்து, திட்டமிடல், சேவை வசதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு செய்தனர்.


ஆண்டுதோறும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால், இந்நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கியமான மத மற்றும் சமூக நிகழ்வாகக் கருதப்படுகிறது.


இதனால், ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உருவாக்குவது மாவட்டச் செயலகம், தொடர்புடைய துறைகள் மற்றும் ஆலய நிர்வாக சபைக்கு ஒப்படைக்கப்பட்ட முக்கிய பொறுப்பாகும்.


கடந்த ஆண்டின் திருவிழாவில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் விளக்கமாக முன்வைக்கப்பட்டதுடன் அதனை அடிப்படையாகக் கொண்டு,

 போக்குவரத்து முகாமைத்துவம்

 ,கடைகள் ஒதுக்கீடு

 ,மலசலகூட வசதிகள்

 ,குடிநீர் வசதிகள்

 ,பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டன.


அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் அவர்களால் ஒவ்வொரு துறைசார்ந்த பிரிவுகளின் தயார்நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்தக் கலந்துரையாடலில் , பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைதுறைபற்று உதவிப் பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, அரச மற்றும் தனியார் போக்குவரத்துக் கழகத்தினர், மின்சார சபையினர், மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், பாதுகாப்பு படைப்பிரிவினர், ஆலய பரிபால சபையினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.