Breaking News

கல்முனை கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான 'கல்லணை தடுப்பு சுவர்' பாதுகாப்பு செயற்திட்டம் ஆதம்பாவா எம் பி தலைமையில் ஆரம்பம்...!

 கல்முனை கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான 'கல்லணை தடுப்பு சுவர்' பாதுகாப்பு செயற்திட்டம்


ஆதம்பாவா எம் பி தலைமையில் ஆரம்பம்...!



கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கல்லணை தடுப்பு சுவர் (Rip Rap Revetment) அமைக்கும் பணிகள் (23-04-2026) காலை 9.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.


கடலரிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்து வந்தனர்.


 இதனடிப்படையில், சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ மற்றும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு அவர்களது துரித தலையீட்டின் பயனாக இக்கல்வேலி அமைக்கும் திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.


நேற்று நடைபெற்ற நிகழ்வில் கௌரவ பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர்கள் கலந்துகொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தனர். 


இவர்களுடன் கல்முனை பிரதேச செயலாளர் அஷ் ஷேக் டி. எம். எம். அன்சார், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. டி. எம். ராபி, கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் திரு. துளசிதாசன், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல். ஏ. மஜீத் மற்றும் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், மீனவ சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இதன்போது, நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் முபாரிஸ் எம். ஹனீபா அவர்களினால் கரையோரப் பாதுகாப்புத் தொடர்பிலான முக்கிய வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டது. தற்போதைய அவசர கால நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் இத்தகைய கடலரிப்பு அபாயங்களுக்கு பேண்தகு அடிப்படையில் ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தினார். 


இக்கோரிக்கையினை மிகுந்த அக்கறையுடன் செவிமடுத்த பிரதி அமைச்சர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர், இப்பிரச்சினை குறித்து உரிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு, விரைவான காலப்பகுதிக்குள் நிரந்தரமான தீர்வை எட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக இதன்போது பகிரங்கமாக உறுதியளித்தனர்.