பிள்ளைகளுக்கு வழங்கும் தண்டனை எவ்வித உடல், உள ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடாது"
பிள்ளைகளுக்கு வழங்கும் தண்டனை எவ்வித உடல், உள ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடாது"
(மோ.கோகுலன்)
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் தண்டனை எவ்வித உடல், உள ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடாது" என கல்வி அமைச்சு 11/2026 இலக்கச் சுற்றுநிரூபத்தின் மூலம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், அரபு மத்ரஸாக்கள் மற்றும் தனியார் கல்வி நிலைய (Tuition Centers) ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்
அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை அதிபர்களுக்கும் முகவரியிடப்பட்டுள்ள இந்த சுற்று நிருபத்தில்,
குறிப்பிடப்பட்டுள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்பு (461/2012 FR) மிக முக்கியமானது.
* அந்தத் தீர்ப்பின்படி, "எந்தவொரு பிள்ளைக்கும் தண்டனை வழங்கும் முறையாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ எவ்வித உடல் அல்லது உள ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடாது" எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
* இது பாடசாலைகளுக்கு மட்டுமன்றி, பிள்ளைகள் கல்வி கற்கும் அனைத்து இடங்களுக்கும் பொதுவான ஒரு சட்டப் பாதுகாப்பாகும்.
உடல் ரீதியான தண்டனைகளுக்கு எதிராக "பூச்சிய சகிப்புத்தன்மை" (Zero Tolerance) கடைபிடிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
* அவ்வாறு தண்டனை வழங்கும் எவராயினும் (அரசு அல்லது தனியார் ஆசிரியர்), அவர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தச் சுற்றுநிரூபம் எச்சரிக்கிறது.
* உள ரீதியான பாதிப்பு: பிரம்பால் அடிப்பது மட்டுமல்ல, மாணவர்களை அவமானப்படுத்துவது அல்லது மன ரீதியாகத் துன்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
* ஒழுக்கத்தைப் பேணுதல்: மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும் போது வன்முறையற்ற, நவீன கல்வி முறைகளைக் கையாள வேண்டும் என்பது இந்தச் சுற்றுநிரூபத்தின் சாராம்சம்.
இந்தச் சுற்றுநிரூபம் பிரதானமாக பாடசாலைகளை இலக்கு வைத்தாலும், இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்பு இலங்கையிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் (மாணவர்களுக்கும்) பொருந்தும்.
எனவே, அரபு மத்ரஸாக்கள் , தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உடல் அல்லது உள ரீதியான தண்டனைகளை வழங்குவதைத் தவிர்ப்பது அவசியமாகும்.
மீறும்பட்சத்தில், அவர்கள் நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் (Penal Code) குற்றவியல் நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
