அரசு காணி அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதிப் போராட்டம்
அரசு காணி அபகரிப்பு: நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக அமைதிப் போராட்டம்
ஜே/420 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, அரச காணி அபகரிப்புக்கு எதிராகவும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்தும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் முன்னெடுத்தனர்.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குடத்தனை வடக்கு மக்கள் காணி அபகரிப்பு மற்றும் துனை போகும் அரச அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பல பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
குறித்த போராட்டத்தின் நிறைவில் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
சம்பவத்தின் பின்னணி:
ஜே/420 கிராம அலுவலர் பிரிவில் உள்ள அரச காணியை, கடந்த சில ஆண்டுகளாக புலம் பெயர் நாட்டில் வசித்து வரும் நபர் ஒருவர், போலி உறுதிப் பத்திரங்கள் (கள்ள உறுதி) மூலம் கையகப்படுத்தியுள்ளார்
அந்தப் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, குறித்த காணியை சுமார் 90 இலட்சம் ரூபாய்க்கும் அதிகத் தொகைக்கு அவர் விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி கிராம முன்னேற்றச் சங்கம் (RDS) சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது
இருப்பினும், பிரதேச செயலகம் தரப்பிலிருந்து எவ்வித உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
காணி ஆணையாளரின் உத்தரவும் அதிகாரிகளின் மெத்தனமும்:
பிரதேச செயலகத்தின் மந்தகதியிலான செயல்பாட்டை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாணக் காணி ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்
மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாகச் செயல்பட்ட காணி ஆணையாளர், குறித்த காணி அரச காணி என்பதை உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
ஆணையாளரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனப் போராட்டக்காரர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.
"அரசு காணியைத் தனியார் காணியாக மாற்றுவதற்கு அதிகாரிகள் ஆதாரங்களைத் தேடுகிறார்களா?" என ஆர்ப்பாட்ட தாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்களின் கோரிக்கை:
தமது குறைகளை முறையிடச் செல்லும் பொதுமக்களை மரியாதையற்ற முறையில் நடத்தும் பிரதேச செயலாளரின் அணுகுமுறை குறித்தும் இதன்போது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
போலி ஆவணங்கள் மூலம் அரச காணியை விற்பனை செய்த நபர் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடமையைச் செய்யத் தவறிய மற்றும் பொதுமக்களுக்குச் சேவை செய்ய மறுக்கும் அதிகாரிகளை உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
அரச காணிகளைப் பாதுகாப்பதில் நிலவும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
