Breaking News

வெகுவிமரிசையாக இடம்பெற்ற கோகிலா மகேந்திரன் அவர்களின் பவளவிழா நிகழ்வுகள்

 வெகுவிமரிசை


யாக இடம்பெற்ற கோகிலா மகேந்திரன் அவர்களின் பவளவிழா நிகழ்வுகள்




கலாபூஷணம் கோகிலா மகேந்திரன் அவர்களின் பவளவிழா நிகழ்வுகள் 21.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இராமநாதன் வீதி (ராஜா கிறீம் ஹவுஸ்) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.


மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து வைத்தியர் சிவரதி கேதீஸ்வரன் அவர்களின் தமிழ் வாழ்த்துடனும் ஆரம்பமானது.


இராஜி கெங்காதரன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து வீணை, வயலின் இசை செவிக்கு விருந்தாக அமைந்திருந்தது.


ஆசியுரையினை கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும், கவி வாழ்த்தினை கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களும், வாழ்த்துரையினை காணொலி தொழிநுட்பம் ஊடாக ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும், தொடக்கவுரையினை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் வழங்கினர்.


தொடர்ந்து பவளவிழா நூலினை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா அவர்கள் வெளியிட பேராசிரியர் க. சிவபாலன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. நூல் அறிமுகவுரையினை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்தினார்.



அதனைத் தொடர்ந்து கோகிலா மகேந்திரன் அம்மையாரின் மாணவ உறவுகளால் "போலச் செய்தல்" நடிப்பு அளிக்கையும் இடம்பெற்றது.


உன்னத ஆளுமையாளராக கோகிலா மகேந்திரன் அவர்கள் பெரிதும் வெளிப்படுவது கல்வியலாளராகவே, எழுத்தாளராகவே, உளவியலாளராகவே, நாடக வல்லுநராகவே எனும் பட்டி மண்டபம் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்றது. குறித்த பட்டிமன்றத்தில் பங்கேற்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பவளவிழா நாயகியின் பன்முகத்தன்மையான பக்கங்களை சிறப்பாக எடுத்துக்கூறினர்.


தொடர்ந்து சோலைக்குயில் மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற வான்விளிம்பில் ஒரு நட்சத்திரம் எனும் நாடகம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.  


தொடர்ந்து கோகிலா மகேந்திரன் அவர்களுக்கு புனிதவதி சண்முகலிங்கன் அவர்கள் கௌரவம் செய்ததனைத் தொடர்ந்து கணவரான மகேந்திரராஜா அவர்களை பொது வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா அவர்கள் கௌரவம் செய்தார்.


இறுதியாக பவளவிழா நாயகியின் ஏற்புரையுடனும், வைத்தியர் சிவரூபி அவர்களின் நன்றியுரையுடனும் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றன.


இந்நிகழ்வுக்கு எழுத்தாளர்கள், உளவளத்துணையாளர்கள், கல்வியலாளர்கள், வாசகர்கள், மாணவர்கள் பங்கேற்புடன் அரங்கம் நிறைந்த நிகழ்வாக இடம்பெற்றமை

 குறிப்பிடத்தக்கது.