எந்த அரசியல் தீர்வும் தமிழ்மக்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
எந்த அரசியல் தீர்வும் தமிழ்மக்களை இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்..! அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி
சி.அ.யோதிலிங்கம்
எந்த அரசியல் தீர்வும், இந்த இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசியல் தீர்வினை அளப்பதற்கு சரியான அளவு கோல் , கோட்பாட்டு அடிப்படையில் இறைமை, சுயநிர்ணயம் தேசிய இனம் , சுய நிர்ணயத்திற்கான பொறிமுறை என்பன அங்கீகரிக்கப்படுவதோடு அரசியல் யாப்புச் சட்ட ரீதியாக தாயக ஒருமைப்பாடு, சுயநிர்ணய சுயாட்சி அதிகாரம் , கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கு , சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவை உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது
மைத்திரி – ரணில் சம்பந்தன் ஆகியோரின் கூட்டு அரசாங்கமான நல்லாட்சி அரசாங்கத்தின் “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனை மீண்டும் அரங்கிற்கு வந்துள்ளது.
இதனை மீண்டும் அரங்கிற்கு கொண்டு வந்தவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தான். சுவிஸ் அரசாங்கத்தினால் சுவிஸ்லாந்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சமஸ்டி தொடர்பான செயலமர்வு அரங்கில் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் அங்கு அதனை பிரஸ்தாபித்திருந்தார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையை தாம் புதிய அரசியல் யாப்பில் சேர்க்க இருப்பதாகவும் அதைப்பற்றி முழுமையாகத் தீர்மானித்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
அச் செயலமர்வு அரங்கில் கலந்து கொண்ட கஜேந்திரகுமார் உடனடியாக அதனை எதிர்த்ததுமல்லாமல் நாடு திரும்பியவுடன் அதனை எதிர்த்துப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார். பல்வேறு சிறிய சிறிய கருத்தரங்குகளில் அதனைப்பற்றிய தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றார். ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளான தமிழரசுக் கட்சியோ ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, இந்த விவகாரத்தில் எந்த அக்கறையையும் காட்டவில்லை. கஜேந்திரகுமாரின் எதிர்வினைகளினாலேயே இந்த விவகாரம் மீண்டும் சிறியளவில் அரங்கிற்கு வந்துள்ளது. ஊடக மட்டத்தில் இது தொடர்பான கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
“ஏக்கியராச்சிய” யோசனை இடைக்கால அறிக்கை என்ற அடிப்படையிலேயே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு நாட்கள் விவாதமும் இடம் பெற்றது. இறுதியில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பிரச்சினை வந்ததால் விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. மகிந்தர் பிரிவினர் இனவாத நிலையில் நின்று கடுமையாக எதிர்த்தனர். முஸ்லீம் தரப்பில் ரவூப்ஹக்கீம் தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் அதாவுல்லா , கிஸ்புல்லா போன்றோர் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் . தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் நிலை நின்று கடுமையாக எதிர்த்தது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. தமிழ் சிவில் சமூகம் ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் எதிர்ப்பைக் காட்டியது. மகாநாயக்கர்களும் பேரினவாத நிலை நின்று எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். அவர்களின் கருத்துக்கள் வழமை போன்று மிகைப்படுத்தப் பட்டவையாகவே இருந்தன.
1981 இன் மாவட்ட அபிவிருத்திச்சபை, 1988 இன் மாகாண சபை என்பவற்றையும் இவர்கள் எதிர்த்ததினால் இதற்கு ஏற்பட்ட எதிர்ப்பு ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கவில்லை.
தமிழ்ச் சூழலில் இவ் யோசனை இடைக்கால அறிக்கை என்றோ நல்லாட்சி அரசாங்கத்தின் தீர்வு யோசனை என்றோ அழைக்கப்படவில்லை. மாறாக “ஏக்கியராச்சிய” யோசனை என்றே அழைக்கப்பட்டது. சுமந்திரன் “ஏக்கியராச்சிய” பதத்தினை நியாயப் படுத்தியமையினாலேயே அப் பெயர் முன்நிலைக்கு வந்தது.
சுமந்திரன் தற்போதும் அதனை நியாயப்படுத்த தயங்கவில்லை. சி.வி.கே.சிவஞானம் மட்டும் தலையிலடித்து சத்தியம் செய்தது போல “ஏக்கியராச்சிய” யோசனையை தமிழரசுக்கட்சி ஒரு போதும் ஏற்காது என சத்தியம் செய்து வருகின்றார்.
தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு வட மாகாணத்தில் வீழ்ச்சியடைவதற்கு “ஏக்கியராச்சிய” யோசனையை சம்பந்தன் தலைமை ஏற்றுக் கொண்டதும் ஒரு காரணமாக அமைந்தது. தேசிய மக்கள் சக்தியும் தமிழரசுக் கட்சியும் சேர்ந்து இவ் யோசனையை தயாரித்தமையினால் தமிழ் மக்களின் ஆதரவும் இதற்கு கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே இதனை உயிர்ப்பிக்க முயற்சித்திருக்கலாம். சுமந்திரன் இரகசியமாக இது விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பச்சைக்கொடி காட்டியிருக்கலாம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுத்தவரை புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பாக எந்த பகிரங்கமான செயற்பாட்டையும் இதுவரை ஆரம்பிக்கவில்லை. புதிய அரசியல் யாப்பு வந்தால் இனப்பிரச்சினைத் தீர்வையும் அதில் சேர்க்க வேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் அதற்கு இருக்கின்றது. தவிர பேரினவாதம் உயிர்த்து விடும் என்ற அச்சமும் அதற்கு இருக்கின்றது. இதனால் புதிய அரசியல் யாப்பு வரும் என தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது. இன்னமும் பொது நிர்வாகமும் இராணுவ நிர்வாகமும் முழுமையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. அது வரும் வரை விஷப்பரீட்சையில் அரசாங்கம் இறங்கும் எனக் கூற முடியாது.
அதற்கான அரசியல் துணிவு தேசிய மக்கள் சக்திக்கு இருக்கின்றது என்றும் கூறிவிட முடியாது. 13 வது திருத்தத்தை உடன் நடைமுறைப்படுத்துங்கள் என்ற பிராந்திய, சர்வதேச அழுத்தத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும் இந்தப் புரளியைக் கிளப்பியிருக்கலாம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உள்ளார்ந்த இலக்கு சமத்துவம், அபிவிருத்தி என்பவற்றை மேலே கொண்டு வந்து அரசியல் தீர்வுக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்வதே!
தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வினை அளவிடுவதற்கு சரியான அளவு கோல் இருக்க வேண்டும். வெறும் வார்த்தை ஜாலங்களுக்குள் தமிழ்த்தரப்பு மயங்கிவிடக் கூடாது. இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதைக் குறிப்பதால் எந்த அரசியல் தீர்வும் இந்த இன அழிப்பிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே அரசியல் தீர்வினை அளப்பதற்கு சரியான அளவு கோல் , கோட்பாட்டு அடிப்படையில் இறைமை, சுயநிர்ணயம் தேசிய இனம் , சுய நிர்ணயத்திற்கான பொறிமுறை என்பன அங்கீகரிக்கப்படுவதோடு அரசியல் யாப்புச் சட்ட ரீதியாக தாயக ஒருமைப்பாடு, சுயநிர்ணய சுயாட்சி அதிகாரம் , கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கு , சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவை உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும்.
இந்த அளவு கோலை அடிப்படையாகக் கொண்டு “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையை அளந்து பார்த்தால் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சியிருக்கும்.
கோட்பாட்டு அடிப்படை சிறிது கூட யோசனையில் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களது இறைமை அங்கீகரிக்கப்படவில்லை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்படவில்லை, சுயநிர்ணயத்திற்கான ஆட்சிப்பொறிமுறையும் நிச்சயமாக்கப்படவில்லை.
“ஏக்கியராச்சிய” பதத்தை கைவிடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. ஏக்கியராச்சியத்திற்குப் பதிலாக மாகாணங்களின் ஒன்றியம் என அழைத்திருக்கலாம். அதற்கும் தயார் நிலை அவர்களிடம் கிடையாது. எனினும் பிடிவாதமாக “பிரிக்கப்பட முடியாத நாடு” என்பதை யோசனையில் சேர்த்திருக்கிறார்கள்.
“மாகாணங்களின் ஒன்றியம்” என்பதை உறுதிப்படுத்திவிட்டு “பிரிக்கப்பட முடியாத நாடு” என்பதைச் சேர்த்திருந்தால் அதில் சில நியாயங்கள் இருந்திருக்கும். ஏனெனில் தமிழ் மக்களின் தேசியமும் , இறைமையும் , சுயநிர்ணயமும் அங்கீகரிக்கப்டாததினால் தான் தமிழ் மக்கள் தனிநாட்டுப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். தற்போது, பூகோள , புவிசார் அரசியல் சூழல் தனிநாட்டுப் போராட்டத்திற்கு ஏற்றதல்ல என்பதால் அவர்கள் அதனை கைவிட்டுள்ளனர் என்பது வேறு கதை.
இலங்கைத்தீவில் அனைத்து இனங்களையும் அவர்களுடைய அடையாள சுய நிர்ணயத்துடன் இணைப்பதன் மூலமே பன்மைத்துவ இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும். இதற்கு முதலில் இலங்கைத்தீவு அனைத்து மக்களுக்கும் உரியது என்ற அரசியல் கலாச்சாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்.
ஒற்றையாட்சி என்ற எண்ணக்கரு மேலாதிக்கம் செலுத்தும் வரை இந்த அரசியல் கலாச்சாரத்தை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது. இது கட்டியெழுப்பாதவரை தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே தான் நிற்க வேண்டி வரும். குறைந்த பட்சம் “ஏக்கிய” என்ற சிங்களச் சொற்பதத்திற்கு பதிலாக “எச்ஸத்” என்பதை சேர்த்திருக்கலாம். அந்தளவிற்கு கூட சிங்கள அரசியல் கலாச்சாரம் இன்னமும் வளரவில்லை.
பன்மைத்துவ அடையாளத்திற்கு எதிராக இருக்கும் இன்னோர் விடயம் “பௌத்த மதம்” முதன்மை மதம் என்பதாகும். அதனைப் பேணிப்பாதுகாப்பது அரசின் கடமை என்ற முதலாவது குடியரசு யாப்பு பதம் “ஏக்கியராச்சிய” யோசனையிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
பௌத்த மதத்திற்குரிய முதன்மை ஸ்தானத்தை மாற்றுவதும் , அதனைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை என்பதை மாற்றுவதும் கடினமாக இருந்தால் சிங்களமும், தமிழும் அரச கரும மொழி எனக் குறிப்பிட்டது போல பௌத்தமும், இந்துவும், இஸ்லாமும் , கிறிஸ்தவமும் முதன்மை மதங்கள் எனக் குறிப்பிடுவதோடு இம்மதங்களை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும் கூறியிருக்கலாம்.
அரசியல் யாப்பு சட்ட வடிவத்தைப் பொறுத்தவரை தாயக ஒருமைப்பாடு மிகவும் முக்கியம். தாயக ஒருமைப்பாடு இல்லாமல் தமிழ் மக்கள் தங்களது கூட்டிருப்பு , கூட்டுரிமை கூட்டடையாளத்தைப் பேண முடியாது.
வடக்கு, கிழக்கு இணைப்பு தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் . வழிகாட்டல் குழுவில் இடம் பெற்ற விவாதத்தின் போது சம்பந்தனோ, சுமந்திரனோ இது பற்றி வாயே திறக்கவில்லை.
“ஏக்கியராச்சிய” யோசனையில் இதுபற்றி எதுவும் கூறவில்லை. பின் இணைப்பில் தமிழ் மக்களின் அபிலாசை என்ற பெயரில் இது சேர்க்கப்பட்டுள்ளது. அது ஒரு கருத்தாக இருந்ததே தவிர யோசனையின் ஏற்பாடாக இருக்கவில்லை. தேர்தல் நலன் கருதியே தமிழரசுக்கட்சி இறுதி நேரத்தில் அதனைச் சேர்த்திருந்தது. வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லீம் மக்கள் சம்மதிக்கவில்லையென்றால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களை நிலத்தொடர்ச்சியற்ற வகையில் இணைத்தல் என்ற யோசனையை சம்பந்தன் தலைமை முன்வைத்திருக்கலாம். அதுவும் நடைபெறவில்லை
சம்பந்தனும், சுமந்திரனும் சிங்கள தேசம் விரும்புகின்றவையை மட்டுமே பேசுவதற்கு அன்று தயாராக இருந்தார்கள்.
இரண்டாவது சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள் இலங்கை அரசு ஒரு ஒற்றையாட்சி அரசாக இருக்கும் போது மாகாணங்களுக்கு சுயநிர்ணய அதிகாரங்கள் ஒரு போதும் இருக்க மாட்டாது. அது ஒரு நிர்வாகப் பரவலாக்கலாக வேண்டுமானால் இருக்கலாம். இறைமை அதிகாரத்தைப் பங்கிடும் அதிகாரப்பகிர்வாக இருக்காது. குறைந்த பட்சம் மத்திய அரசு தலையிடாத சுயாதீனம் இருக்க வேண்டும். “ஏக்கியராச்சிய” யோசனையில் மாகாணத்திற்கென உருவாக்கப்படுகின்ற பகிரங்க சேவை ஆணைக்குழுவைக் கூட மத்திய அரசின் நிறுவனமாக அரசியலமைப்புப் பேரவை அங்கீகரிக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு அரசியலமைப்பு பேரவை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் போது தமிழ் மக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும் எனக் கூற முடியாது.
அதிகாரங்கள் யோசனையில் சுயாதீனமாக இருக்கவில்லை. காணி அதிகாரம் தொடர்பாகவும் தெளிவான ஏற்பாடுகளில்லை. அரசியலைப்பு பேரவை மத்திய மட்டத்தில் ஒரு அதிகார மையமாக்கப்பட்டுள்ளது. அங்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தில் தமிழ் மக்களுக்கு பெரிய பங்கில்லை.
மூன்றாவது மத்திய அரசாங்கம் தேசிய இனங்களின் கூட்டரசாங்கமாக இல்லை. அவ்வாறு இருப்பதற்கான பொறிமுறைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. அது எப்போதும் சிங்கள பௌத்த அரசாகவே இருக்கும். மத்திய அரசினை சிங்கள – பௌத்த அரசாக வைத்துக் கொண்டு எந்த அதிகாரப்பகிர்வினை வழங்கினாலும் அது ஒரு போதும் நடைமுறைக்கு வரப்போவதில்லை .
நான்காவது வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பு இது மிகவும் பலவீனமாக உள்ளது. இப்பாதுகாப்பு பலவீனம் சட்டத்துறை, நிர்வாகத்துறை , நீதித்துறை ஆகிய மூன்றிலும் உண்டு. எனவே மூன்று துறைகளிலும் குறைந்தபட்சம் தமிழ் மக்களின் விவகாரங்களிலாவது தமிழ் மக்கள் தீர்மானிக்கக் கூடிய பாதுகாப்புப் பொறிமுறை வேண்டும். “ஏக்கியராச்சிய” இதைப்பற்றி எதுவும் கூறவில்லை.
தமிழ் மக்களுக்கு இவை தொடர்பாக ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறித்த நீண்ட அனுபவம்.
சோல்பரியின் 29 வது பிரிவு தொடக்கம் , வடக்கு –கிழக்கு பிரிப்பு ஊடாக 13 வது திருத்தம் வரை உண்டு. அரசியல் யாப்பில் இவை பற்றி தெளிவாக எழுதுவதில்லை. எழுதியவற்றையும் நடைமுறைப் படுத்துவதுமில்லை. தமிழ் மக்கள் அழுத்தம் கொடுப்பின் அதனை அரசியல் யாப்பிலிருந்து நீக்கி விடுவது என்பதே வரலாறாக உள்ளது. 13 வது திருத்தத்தில் உள்ள மாகாண பொலிஸ் பிரிவு , காணி அதிகாரம் என்பன இதற்கு நல்ல உதாரணம். அவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அரசியல் யாப்பு சட்ட வல்லுனரான நீலன் திருச்செல்வம் ஒரு தடவை “அரசியல் யாப்பில் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரங்களை தெளிவாக எழுத வேண்டும். அவ்வாறு எழுதாவிட்டால் நீதிமன்றங்கள் பொருள் விளக்கம் கொடுக்க வேண்டி வரும். இலங்கை நீதிமன்றங்கள் ஒரு போதும் தமிழ் மக்கள் சார்பாக பொருள் விளக்கம் வழங்குவதில்லை” என்று கூறியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.
மொத்தத்தில் “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனை சிறியளவில் கூட தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கக் கூடியதாக இல்லை “ஏக்கியராச்சிய” யோசனையை தமிழ் மக்களில் சுமந்திரன் போன்றோர் எதிர்காலத்தில் தூக்கிக் கொண்டு வரலாம். தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது.
“ஏக்கியராச்சிய” யோசனையைக் கொண்டு வருவதை விட 13 வது திருத்தத்தை சமஸ்டியாக்குவது பற்றி யோசிப்பது நல்லது.
முழு அரசியல் யாப்பில் இரண்டு திருத்தங்களையும் 13 வது திருத்தத்தில் ஐந்து வகையான திருத்தங்களையும் செய்வதன் மூலம் 13 வது திருத்தத்தை சமஸ்டி முறைக்குரியதாக மாற்றலாம். முழு
அரசியல் யாப்பில் உறுப்புரை – 2 இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடு எனக் கூறுகின்றது.
