Breaking News

மட்டக்களப்பு மாநகரில் அரச ஒசுசல இன்று திறந்துவைப்பு...!!

 மட்டக்களப்பு மாநகரில் அரச ஒசுசல இன்று திறந்துவைப்பு...!!





மட்டக்களப்பு மாநகரில் அரச ஒசுசல இன்று (31) திறந்துவைக்கப்பட்டது.


தரமான மருந்துகளை சாதாரண விலையில் வழங்கும் நோக்கத்துடன் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் இந்த புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது.


சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவின் எண்ணத்திற்கு ஏற்ப அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (அரசாங்க ஒசுசல வலையமைப்பின்) 67 வது கிளை இதுவாகும்.


இந்த அரசு ஒசுசல கிளை ஊடாக அனுபவம் மிக்க மருந்தாளர்களின் சேவையின் கீழ், உரிய தரத்துடனும், உத்தரவாதத்துடனும் மருந்துகளை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, 


இங்கு சிரேஷ்ட பிரஜைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், 05 வயதுக்கு குறைந்த குழந்தைகள் மற்றும் முப்படை வீரர்களின் விருசர அட்டைகளுக்காக 5% விசேட விலை கழிவுடன் மருந்துகள் வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.  


நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி அரசாங்க மருந்தாக்கள் கூட்டுத்தாபனத்தின் மூலம் சந்தைக்கு விடப்படும் இந்த மருந்து பொருட்களை இங்கு பொது மக்கள் நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


இலங்கை மக்களுக்கு உயர்தரத்திலான நிரூபிக்கப்பட்ட மருந்துகளை நியாயமான விலையில் வழங்குவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு, பேராசிரியர் சேனக பிபிலே அவர்களால் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், 54 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டு மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கி வருகிறது.


இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பிரதம அதிதியாக கலந்து கொண்டார் 


கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய ஜே.எஸ்.அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். தனஞ்ஜெயன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பீடாதிபதி தில்லைநாதன் சதானந்தன், அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனூஜ் சி.வீரசிங்க, முகாமைத்துவ பணிப்பாளர் மெவன் சம்பத் சுபசிங்க ஆரச்சி, உட்பட அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.