Breaking News

கிருஷாந்தியின் நினைவேந்தல் நிகழ்வு..!

 கிருஷாந்தியின் நினைவேந்தல் நிகழ்வு..!



கிருஷாந்தி குமாரசுவாமி, அவரது தாய், சகோதரர் மற்றும் அயலவர் ஆகியோரின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் நடைபெற்றது. மக்கள் சுடர் ஏற்றி மலர்தூவி கிருஷாந்தி மற்றும் அவரது குடும்பத்தாரையும், செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.


1996ம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி பாடசாலை மாணவியான கிருஷாந்தி, செம்மணி சந்தியில் அமைந்திருந்த இராணுவ சோதனைச் சாவடியில் தடுக்கப்பட்டு , அங்கு பல்வேறு படையினரால் கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.


அவரைத் தேடி சென்ற அவரது தாய், சகோதரர் மற்றும் அயலவரும் கொல்லப்பட்டனர். நால்வரும் ஒன்றாகச் செம்மணி பகுதியில் இலங்கை இராணுவ சிப்பாய்களால் புதைக்கப்பட்டனர்.


படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் செம்மணியை நினைவுகூரும் வகையில் "வாசலிலே கிருஷாந்தி" எனும் ஒரு கவிதை நூலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதியை நிலைநாட்ட வேண்டும் என உரையாற்றியவர்கள் வலியுறுத்தினர்.


மேலும் இந்த நினைவேந்தலில் தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.