யாழ். பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது - சயனைட் அறிமுக நிகழ்வில் தீபச்செல்வன் உரை
யாழ். பல்கலைக்கழக நூலகமே என்னைப் படைப்பாளியாக்கியது
- சயனைட் அறிமுக நிகழ்வில் தீபச்செல்வன் உரை
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் அறிமுக விழா 11.09.2025 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுக்கு கலைப்பீடாதிபதி எஸ். ரகுராம் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக ஐ.பி.சி தமிழ், ரீச்சா நிறுவனர் கந்தையா பாஸ்கரன் கலந்து சிறப்பித்தார்.
யாழ். பல்கலைக்கழக தமிழியல் நூலகத்துக்கு சயனைட் நாவல் அன்பளிப்பாக வழங்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த நாவலினை நூறு மாணவர்களுக்கு தன்னுடைய செலவில் இலவசமாக க.பாஸ்கரன் அவர்கள் வழங்கி வைத்தார். நிகழ்வினை பல்கலைக்கழக மாணவர் லம்போ கண்ணதாசன் தொகுத்து வழங்கி இருந்தார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியரான அருணாசலம் சத்தியானந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
போரை நிறுத்தச் சொல்லி அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய அளவுக்கு அன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மக்களை அணிதிரட்டி அவர்களை வழிப்படுத்தி பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் அதன் மாணவர் ஒன்றியங்களும் காலத்திற்கு காலம் காத்திரமான பணிகளை ஆற்றி வந்திருக்கின்றன. இந்தப் பல்கலைக்கழகம் தீபச்செல்வனையும் தமிழ்த் தேசியக் கொள்கையில் இருந்து தடம் மாறாதவராக சரியாக செம்மைப்படுத்தி இருக்கிறது. எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாதவராக இலக்கை நோக்கி எழுதிக் கொண்டிருக்கிறார். போருக்கு பின்னர் புதிய நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். எம்மக்களை வழிநடாத்துவதற்கு தலைமையேற்கும் நிறுவனமாக யாழ் பல்கலைக்கழகம் மாற வேண்டும் என்கிற ஏக்கம் தமிழ் மக்களிடம் இருக்கிறது. இந்த நேரத்தில் அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை யாழ் பல்கலைக்கழகம் மீது வைத்திருக்கிறார்கள். போர் முடிந்து 15 வருடங்களாகியும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் தென்படவில்லை. அடுத்த சந்ததிக்கு எம் போராட்ட வரலாறுகளை இப்படியான படைப்புகள் நிச்சயம் கடத்தும். என்றார்.
ஐ.பி.சி / ரீச்சா நிறுவனங்களின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த மண்ணிலே தமிழ்த் தேசியம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. அது காக்கப்பட வேண்டும். தேசிய விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு சில எழுத்தளார்கள் அடையாளமாக இருக்கின்றார்கள். அதில் தீபச்செல்வனும் ஒருவர். எம் இனத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமைகள், நாம் கடந்து வந்த பாதைகள் எல்லாமே எம் இளைஞர்களுக்கு தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இருக்கிறது. இதன் உள்ளடக்கம் மிக ஆழமானது என்பதாலேயே இந்த புத்தகத்தை வாங்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என முடிவு செய்தேன். ஒவ்வொரு மாணவரும் இதனை படித்து மற்றைய மாணவர்களையும் படிக்க வையுங்கள். உங்கள் கைகளிலே ஏராளமான பொறுப்புகள் உள்ளன. என்றார்.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் கருத்து தெரிவிக்கையில்,
இது எங்களுடைய கதை, எங்களிடையே இருக்கக் கூடிய கதை மாந்தர்களின் கதை, அவ்வாறானவர்களை படைப்பாக்கத்தினூடாக தீபச்செல்வன் எங்கள் கண் முன் கொண்டு வந்திருக்கிறார். இதனை வாசித்து அந்த அனுபவங்களை நாங்களும் பெற வேண்டும். எங்கள் வரலாறு மிகவும் முக்கியமானது. அதிலும் பல்கலைக்கழக மாணவர்கள் சந்தித்திருக்கக் கூடிய நெருக்கடிகள் போரின் வெம்மைகளுக்குள் அவர்கள் நின்று களமாடிய விடயங்கள் இவை யாவற்றையும் நாங்கள் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கடத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஒரு புறம் ஆயுதப் போராட்டம் வீறு கொண்டு எழுந்த போது பல்கலைக்கழக சூழலிலே அதை ஆதரிப்பதாக, அனுசரித்துப் போவதாக, அதற்கு வலுவூட்டுவதாக ஒரு போராட்ட சூழலை தக்கவைப்பதிலே இங்கிருக்கக் கூடிய மாணவ செயற்பாட்டாளர்கள் மிகக் கடுமையான பணிகளை செய்து வந்தார்கள். மிக சவாலான சூழல்களை எதிர்கொண்டார்கள். பலர் தங்கள் உயிர்களையும் துறந்தார்கள். அப்படியான களச்சூழலில் தான் கண்டுணர்ந்த விடயங்களை உள்வாங்கிக் கொண்டு அவற்றை நாவல் என்கிற வடிவத்தில் ஆவணமாக்கி இருக்கிறார் தீபச்செல்வன். இறுதி யுத்தகாலத்தின் பின்னராக எங்களை திசை திருப்ப மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட செயல்களினூடாக மாணவர்களுக்கு போராட்டம் சார்ந்த முக்கியமான விடயங்கள் தெரியாமல் இருந்து வருவதனை மிக கவலையுடன் கண்டுணர வேண்டியதாக இருக்கிறது. உயிர்களை தியாகம் செய்திருக்கக் கூடிய எப்படியான தியாகங்களை நாங்கள் கண்டு வந்திருக்கிறோம். இப்படியான படைப்பாக்கங்கள் எங்களுக்கு முக்கியமான நினைவூட்டிகளாக இருக்கப் போகின்றன. இந்த நாவல் எமது மாணவர்கள் மத்தியில் அறிமுகமாவது மிகவும் முக்கியமானது. இந்த நாவல் சொல்ல வருகின்ற செய்தியினை நாங்கள் சரியாக புரிந்து கொண்டு வரலாற்றை அடுத்தடுத்த சந்ததிகளுக்கு ஊடுகடத்தக் கூடியவர்களாக நாங்கள் மாற வேண்டும். என்றார்.
நிகழ்வின் இறுதியில் எழுத்தாளர் தீபச்செல்வன் ஏற்புரையினை ஆற்றுகையில்,
அன்றைய போர்க்கால பல்கலைக்கழக சூழலும், எங்களைச் சுற்றியிருந்த போராட்டங்களுமே என்னை செழுமையாக்கியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாக, மாணவத் தலைவர்களாக உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. பல்கலைக்கழக படிப்பு முடிந்த பின்பு எங்காவது அரச திணைக்களம் ஒன்றிற்கு அபிவிருத்தி உத்தியோகத்தராக வேலைக்கு போகிறோம், கையொப்பத்தை இடுகிறோம். வேலையோடு முடங்கிப் போகிற வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதவர்களாக நீங்கள் வந்துவிடக் கூடாது என்பது எனது அழுத்தமான கோரிக்கை. இப்படியான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ இந்தப் பல்கலைக்கழகம் கட்டப்படவில்லை. ஒவ்வொரு தனிநபர்களும் உங்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்றிக் கொள்வீர்களாக இருந்தால் தொழில் முனைவோராக, படைப்புத் துறை சார்ந்தோராக, ஊடகத்துறை சார்ந்தோராக, கல்வித் துறை சார்ந்தவராக இருக்கலாம் நாங்கள் முன்னேறுவதற்கும் முகவரி சொல்வதற்கும் நாங்களே இந்த தேசத்தை ஆள்வதற்கும் பல துறைகள் இருக்கின்றன.
வெறுமனே முன்னாள் போராளியின் வாழ்க்கைப் போராட்டம் சார்ந்த கதையை உங்கள் கைகளில் தரவில்லை. இந்தக் கதையின் வாயிலாக நீங்கள் இந்த தேசத்தில் ஆற்ற வேண்டிய சேவையினுடைய கோரிக்கைக்கான விண்ணப்பத்தைத் தான் உங்களுடைய கைகளில் தந்திருக்கிறேன். 2009 இல் எமது இனத்தை பெருமளவுக்கு இனப்படுகொலை செய்து எங்களுடைய சமூகத்தை ஊமைகளாக்கி விட்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு எங்களுடைய சமூகம் இயல்பாகவே ஊமைகளாகி ஆகக்குறைந்த மனிதப் பண்பும் இல்லாத சமூகமாக நாங்கள் மாறிக் கொண்டிருக்கின்றோம். மிக நூதனமாக இனவழிப்பும், இன ஒடுக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகின்ற இலங்கைத்தீவில் எங்கள் இருப்பை இல்லாமல் செய்ய நாங்கள் சேவைகளை செய்ய வேண்டும். ஆயிரமாயிரம் எங்கள் வீரமறவர்களை மண்ணுக்குள் புதைத்திருக்கிறோம். அதற்காகவே எங்களுடைய அண்ணன்களும் அக்காக்களும் சயனைட்டுகளை தங்கள் கழுத்துகளில் கட்டிக் கொண்டார்கள். அப்படிக் கட்டிக் கொண்ட ஒரு மாவீரனின் கதையே இது. அப்படிக் கட்டிக் கொண்டவர்கள் இன்று நடைப்பிணங்களாக, பிச்சைக்காரர்களாக, கைவிடப்பட்ட மனிதர்களாக அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நான் இந்த பல்கலைக்கழக நூலகத்திலே அதிக நேரங்களை செலவிட்டிருக்கிறேன். நான் இன்று படைப்பாளியாக மாறி எழுதுகிறேன் என்றால் அதற்கு பல்கலைக்கழக நூலகமே காரணம். கைலாசபதி அரங்கில் தான் நான் மேடைப் பேச்சு பழகினேன். அந்த மகத்துவம் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தப் பல்கலைக்கழகத்த்துக்குள் காலடி எடுத்து வைக்கும் போது இதயமெல்லாம் ஈரமாகுவதனை உணர்ந்திருக்கிறே
ன். என்றார்.