Breaking News

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் 44வது ஆண்டு வழிபாடும், சிறுவர் அபிவிருத்தி நிலைய கட்டட திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் 44வது ஆண்டு வழிபாடும், சிறுவர் அபிவிருத்தி நிலைய கட்டட திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது.



1981 ம் ஆண்டு இதே நாளில் உருவாகப்பட்ட முறிகண்டி திருச்சபை சமய பணிகளுடன் நின்றுவிடாது, பாலர் பகல் பராமரிப்பு நிலையம், பெண்கள் இல்லம் உள்ளிட்ட சமூகப் பணிகளையும் முன்னெடுத்தது.


யுத்தம் காரணமாக கட்டட வசதிகளை இழந்த திருச்சபை பல்வேறு வழங்களுடன் சமூகப் பணிக்காக காத்திருந்தது.


இந்த நிலையில், புனருத்தானம் செய்யப்பட்ட கட்டடம் இன்று ஆண்டு விழா வழிபாட்டினைத் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டது.


குறித்த வழிபாடு திருச்சபை குருவான வணபிதா எஸ் குகனேஸ்வரன் தலைமையில் 9.30 மணிக்கு ஆரம்பமானது. தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.


தொடர்ந்து, புனருத்தானம் செய்யப்பட்ட கட்டடத்தினை பிரதிஸ்டை செய்த அதிவணக்கத்துக்குரிய பேராயர் வே.பத்மதயாளன், மறைந்த பேராயர் D.J அம்பலவாணர் ஞாபகார்த்த மண்டபத்தினை திறந்து வைத்தார்.


ஒளியேற்றப்பட்டதனைத் தொடர்ந்து, நிர்வாகப் பிரிவு திரு.ஜோசப் ஜோன்சன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.


குறித்த நிகழ்வில், திருச்சபையின் சிரேஸ்ட ஊழியர்கள், உதவிக்குருமார், திருச்சபை மக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


சிறுவர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 150க்கு மேற்பட்ட சிறார்கள் 22 வயதுவரை போசாக்கு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களில் பயனடைய உள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


சுமார் 3 மாதங்களாக திருச்சபை மண்டபத்தில் இயங்கி வந்த குறித்த திட்டத்தின் பணிகள், இன்று முதல் புதிய கட்டடத்தில் முன்னெடுக்கப் படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது