Breaking News

நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் ஊடாகவே நுளம்புக் பரவும் நோய்களை கட்டுபடுத்த முடியும்..!

 நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் ஊடாகவே நுளம்புக் பரவும் நோய்களை கட்டுபடுத்த முடியும்..!



நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமே

நுளம்பினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என பூநகரிப் பிரதேச

மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.


நாடளாவிய ரீதியாக கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் 09/07 புதன்கிழமை அனைத்துப் பாடசாலைகளையும் மையப்படுத்தி பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பூநகரி மத்திய கல்லூரியில் பொலிசார், சுகாதாரத் திணைக்களம் மற்றும் கல்வித்திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொண்ட நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;


தற்போது இலங்கையில் பரவிவரும் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைக் கட்டுப்படுத்த வினைத்திறனானதும், எளிமையானதுமான வழி நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதேயாகும்.


 இத்திட்டத்தின் மூலம் இன்று ஒருநாள் முழுவதும் பாடசாலையில் பல்வேறு பகுதிகளையும் தூய்மைப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதை இன்றுடன் முடித்துக்கொள்ளாமல் உங்கள் வீடுகள்,வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்களென அனைத்துப் பகுதிகளுக்கும் இதை எடுத்துச் செல்வதோடு நாளாந்தம் அமுல்படுத்தவும் வேண்டும்.


மழைகாலங்களில் மட்டுமல்ல மழை இல்லாதபோதும் நீரேந்தக்கூடிய நுளம்புபெருகும் கொள்கலன்களை வெளியில் விடக்கூடாது. வைரசினால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியாவைப் பரப்பும் காவிகளான நுளம்புகள் காலை, மாலையிலேயே வீட்டுக்கு வெளியில் அதிகளவில் கடிக்கின்றன.

நோயாளியைக் கடித்த நுளம்பு ஆரோக்கியமானவரைக் கடிக்கும்போது நோய்குரிய வைரஸ் கடத்தப்பட்டு அவர் நோயாளியாக மாறுவார்.

காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் விரைந்து தகுந்த வைத்தியரிடம் சிகிச்சை பெறவேண்டும்.


இந்தநுளம்புகள் "ஈடிஸ்" வகையைச் சேர்ந்தவை. கறுப்புநிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடையவை.

இவை நீருள்ள பாத்திரத்தின் சுவரில் ஒட்டக்கூடியவாறு முட்டைகளை இடுவதோடு இம்முட்டைகள் பன்னிரெண்டு மாதங்கள் வரை நீரின்றிய நிலையிலும் உயிர்ப்பாயிருந்து மீண்டும் நீர்கிடைக்கும்போது பொரித்து நுளம்புகளாகக்கூடியன. நோயுடைய ஒருவரைக் கடித்த நுளம்பு முட்டையிடும்போது அதன்முட்டைகளினுள்ளும் வைரஸ் காணப்பட்டு பொரித்து நும்புகளானதும் நோயைப்பரப்பக் கூடியனவாக வருகின்றன.


எனவே நுளம்புபெருகும் இடங்களான நீரைத் தேக்கிவைக்கும் தொட்டிகளை வாரமொருமுறை உட்சுவரை உரஞ்சிக்கழுவி நீர் மாற்றவேண்டும். உயரமாகவுள்ள நீர்த் தொட்டிகளினுள் நுளம்புகள் உட்புகாதவாறு தடைசெய்யப்படவேண்டும். கூரைப் பீலிகளைக் கிரமமாகச் சுத்தப்படுத்தவேண்டும்.

ரயர், சிரட்டை, இளநீர்க்கோம்பை, பொலித்தீன் பிளாஸ்டிக் மற்றும் கைவிடப்படும் கொள்கலன்களை நீர்தேங்காத இடங்களில் சேகரிக்கவேண்டும்.


எவ்வாறு கழிவுமுகாமைத்துவம் செய்வது, எவ்வாறு பாதுகாப்பாக இறுதிக் கழிவகற்றலை மேற்கொள்வது என்பது குறித்த அறிவை பாடசாலைக் காலத்திலிருந்தே பெற்று மனப்பான்மையில் சீரான மாற்றத்தை உண்டுபண்ணி அதைப் பரீட்சித்துப் பார்த்து வழக்கமாக்கும் போது நடத்தைமாற்றமாகி அது நீடித்து நிலைக்கும் செயற்பாடாக மாறும்.


கழிவு முகாமைத்துவத்தில் குறைத்தல்(Reduce), மீளப் பயன்படுத்துதல்(Re use), மீழ்சுழற்சிக்கு உட்படுத்துதல்(Recycle) போன்றவற்றை வீடு மற்றும் பாடசாலைகளிலேயே கடைப்பிடிக்கவேண்டும். பொதுவான கழிவுகளை வகைபிரித்து சேகரிப்பதன் மூலம் கழிவுகளின் பிரச்சனைக்கு இலகுவாகத் தீர்வைக்காண முடியும். இதற்காக

பச்சைநிறம் அழுகக்கூடிய பொருட்களுக்கும், நீலநிறம் கடதாசிக் கழிவுகளுக்கும், சிவப்புநிறம் கண்ணாடிப் பொருட்களுக்கும், கபிலநிறம் உலோகப்பொருட்களுக்கும், செம்மஞ்சள் நிறம் பொலுத்தீன் பிளாஸ்டிக் பொருட்கள் இடவென வைக்கப்படல் வேண்டும்.


இயன்றவரை உக்கும், உக்காத கழிவுகளை எரிப்பதைத் தவிக்கவேண்டும். இது வளியை மாசுபடுத்தும். உக்காத பொருட்களைப் புதைப்பதால் தாவரங்கள் பாதிப்படைவதோடு மண்ணீரும் இழக்கப்படும்.


இந்த கிளீன் சிறிலங்கா திட்டம் ஊடாக தீயன அகன்று மனதிலும் சுற்றுப்புறத்திலும் அழுக்குகளற்ற அழகான சமுதாயமொன்றை உருவாக்க நாம் முன்வரவேண்டும்.


கழிவுகளால் மாசுபடாத அழகான சூழலாக எமது பாடசாலைகளைப் பேணி நோய்களின் ஆபத்துக்களைத் தவிர்த்து ஆரோக்கியமான நல்ல பிரஜைகளாக வாழவேண்டுமென்பதே எமது விருப்பு என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.