Breaking News

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது..!விடுதலை செய்யுமாறு உறவினர்கள் கோரிக்கை:


எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது..!விடுதலை செய்யுமாறு உறவினர்கள் கோரிக்கை:



ராமநாதபுரம் ஜூலை 13,


ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்


கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை காலை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.


மீனவர்கள் இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் இலங்கை காங்கேசன்துறை வடமேற்கு கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஈசக்பவுல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த தூதர, சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டார்வின் ராஜ், அன்பழகன் ஆகிய ஏழு மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முதற்கட்ட விசாரணை முடிந்த பின்னர் மீனவர்களை படகுடன் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். ஒப்படைக்கப்படும் மீனவர்கள் இன்று மாலை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


பேட்டி: 


    பேச்சியம்மாள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர் தாய்