Breaking News

தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மனின் நினைவேந்தல் வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிப்பு!

 தராகி சிவராம் மற்றும் ரஜிவர்மனின் நினைவேந்தல் வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிப்பு!



 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி ஊடக இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.


 ஊடகவியலாளர்களான தராகி சிவராமின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், செல்வராசா ரஜிவர்மனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (28.04.2024) திங்கட்கிழமை பகல் 11.00 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.


 ஊடகவியலாளர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு - பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10.30 மணியளவில் யாழ். ஸ்டான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


 யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு வடமராட்சி ஊடக இல்ல் தலைவர் கு.மகாலிங்கம் மாலை அணிவித்தார். தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர்.


இதன் போது கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தராகி சிவராம் அடிக்கல் நாட்டி  ஆரம்பித்து வைத்த தமிழ் ஊடக கல்லூரி இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது அக் காணியை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு பக்க பலமாக தமிழ் அரசியல் வாதிகள் பாராளுமன்றில் குரல் குடுக்க வேண்டும் என வலியுறித்தியுள்ளது.