Breaking News

சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் தேசிய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயகோபி இரங்கல்!


சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் தேசிய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயகோபி இரங்கல்!



தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், தேசிய அடையாளம், இனத்தின் இருப்பு மற்றும் விடுதலை சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளுக்காகத் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு, தமிழ் தேசிய அரசியல் பரப்புக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயகோபி தெரிவித்துள்ளார்.


சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், உரிமைகளையும் சர்வதேச அரங்கிலும் உள்ளூர் அரசியல் தளங்களிலும் உரத்த குரலில் எடுத்துரைத்தவர்களில் சிவாஜிலிங்கம் அவர்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.


அரசியல் நெருக்கடிகள், சவால்கள், அச்சுறுத்தல்கள் எனப் பல்வேறு தடைகள் எதிர்கொண்ட காலங்களிலும் தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களில் தனது குரலைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்தவர். தமிழ் தேசிய அரசியல் பயணத்தில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்று, மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காகத் தொடர்ச்சியாகச் செயற்பட்டவர்.


குறிப்பாக, தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், தமிழ் மக்களின் வரலாறு, அரசியல் அடையாளம், தேசிய நினைவுகள் மற்றும் தியாகங்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.


அரசியல் என்பது வெறுமனே பதவிகளுக்கான பயணமல்ல, அது ஒரு இனத்தின் உரிமைகளையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான பொறுப்புமிக்க பணி என்பதைத் தனது அரசியல் செயற்பாடுகள் ஊடாக வெளிப்படுத்தியவர் சிவாஜிலிங்கம்.


அவரது மறைவுடன் ஒரு அரசியல் செயற்பாட்டாளர் மாத்திரமல்ல, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்திய ஒரு குரலையும், நீண்டகால அரசியல் அனுபவத்தையும், பல்வேறு போராட்ட வரலாறுகளுடன் பயணித்த ஆளுமையையும் தமிழ் தேசிய அரசியல் சமூகம் இழந்துள்ளது.


அவர் ஆற்றிய அரசியல் பணிகளையும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர் முன்னெடுத்த செயற்பாடுகளையும் காலம் கடந்து நினைவுகூர வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.


அன்னாரின் மறைவு ஏற்படுத்தியுள்ள துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அவரது அரசியல் பங்களிப்புகள் தமிழ் மக்களின் வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டியவையாகும்.


அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயகோபி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.