அமர்க்களப்படும் பாராளுமன்ற தேசிய பட்டியல்களும் அவற்றை கையாள முடியாத தலைமைகளும்
அமர்க்களப்படும் பாராளுமன்ற தேசிய பட்டியல்களும் அவற்றை கையாள முடியாத தலைமைகளும்.....
அண்மைக் காலமாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்குரிய ஒரு போட்டிக் களமாக வடக்கு கிழக்கின் சில பகுதிகளான கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், கல்குடா மட்டுமல்லாமல் குருநாகல் மாவட்டமும் அமர்க்களப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சிறுபான்மை கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கிய இன்னுமொரு தேசிய பட்டியல் உறுப்பினரும் அடங்கலாக இரண்டு உறுப்பினர்களும் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள் அடங்கலாக மொத்தம் ஐந்து உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி வழங்கிய ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருடன் மொத்தம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.
இந்த முஸ்லிம் தேசிய பட்டியல்கள் மூலமாக கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்த நாட்டுக்கோ அல்லது வாக்களித்த வடக்கு கிழக்கு மக்களுக்கோ கிடைக்கப் பெற்ற அனுகூலங்கள் என்ன என்பதை இங்கு விரிவாக பேசவே வேண்டியதில்லை. வாக்களித்த மக்களே அவற்றை தீர்மானிக்கட்டும்.
ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் மட்டுமல்ல இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் கூட இந்த இரண்டு கட்சிகளின் தலைமைகளும் தமக்கு இருக்கும் ஒன்று அல்லது இரண்டு தேசிய பட்டியல்களை வைத்துக்கொண்டு வடக்கு கிழக்கின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் சென்று வாக்குறுதி அளித்து புனித குர்ஆனில் சத்தியம் கூட செய்து குறித்த ஊர்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக வழங்கிய வாக்குறுதிகள் காற்றோடு காற்றாக கரைந்து போன கடந்த கால கவலைக்குரிய நிகழ்வுகள் இன்னும் கூட அந்தந்த ஊர் மக்கள் மத்தியில் பேசப்படுவதும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த தேசிய பட்டியல் விவகாரம் “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை”யாகிப் போய் உள்ளது.
பெரும்பான்மை கட்சிகளுக்கு அவர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் கடந்த காலங்களில் தேசிய பட்டியல்கள் கிடைத்தன. அவற்றை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவர்கள் வழங்கியதுடன் தேசிய பட்டியலின் கதை அத்தோடு முடிந்து விடுவதும் வழக்கமாகும்.
தமிழ் கட்சிகள் கூட இந்த அளவுக்கு தேசிய பட்டியலை வைத்துக்கொண்டு ஊர் ஊராக அரசியல் பிழைப்பு நடத்துவதுமில்லை அதன் பின்னால் அவர்கள் அலைமோதுவதும் இல்லை. அவர்களின் தனித்துவம் நிறைந்த கௌரவமான அரசியல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
ஆனால் முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் தேசிய பட்டியல் விவகாரம் மட்டும் தொடக்கத்தில் இருந்தே “நீறு பூத்த நெருப்பாக” எரிந்து கொண்டிருக்கிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியிடம் சவால் விட்ட நிலையில் போராடி நீதிமன்றம் போகப் போகின்றோம் என்று அச்சுறுத்தியதன் விளைவாகத்தான் அந்த கட்சிக்கு ஒரு உறுப்பினர் கிடைத்தது.
அதே சமயம் இன்னுமொன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய மூன்றில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்காக மனோ கணேசனுக்கு ஒன்றும் அது போக தமது கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கியது.
தேசியப்பட்டியல் எம்பி பதவியின் தரத்தை மலினப்படுத்தும் வகையில் ஊர் ஊராக சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரம் செய்து அதனை கேவலப்படுத்தும் கைங்கரியத்தை இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் நீண்ட காலமாக அரசியல் அரங்கில் முன்னெடுத்து வருகின்றன.
இந்த கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் இந்த அரசியல் வியாபாரத்திற்கு ஒருபோதும் உடந்தையாக இருந்ததில்லை. அத்துடன் இவர்களுக்கு அதற்கான உரிமையையோ அதிகாரத்தையோ வழங்கவும் இல்லை என்பதும் அவர்கள் நன்கு தெரிந்த அறிந்த விடயமாகும்.
இதில் குறித்த அந்த ஆறு மாதம் அல்லது ஒரு வருட கால எல்லைக்குள் எதனை அந்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களால் சாதிக்க முடிந்திருக்கின்றது என்பதை மக்கள் தான் நிதானமாக நின்று சற்று யோசிக்க வேண்டும். ஊருக்கு ஒரு எம் பி இருக்கின்றார் என்ற ஒரு கௌரவத்தை அல்லது ஒரு பெருமையைத் தவிர இவர்களால் என்ன செய்ய முடிந்திருக்கிறது.
அடுத்தது இந்த தலைமைகள் தேசிய பட்டியலுக்காக நியமிக்கும் உறுப்பினர்களின் தகுதி, தராதரம், அரசியல் அனுபவம், ஆளுமை, மொழியாற்றல், மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கு, கல்வித்தரம் என்பவற்றை எடுத்து நோக்கினால் அதுவும் பூஜ்ஜியமாகவே இருப்பதைத்தான் கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம்.
கண்ட நிண்டவர்கள் எல்லோரும் பாராளுமன்ற தேசிய பட்டியலை எதிர்பார்த்து தமது சோசியல் மீடியா ஏஜென்ட்கள் மூலமாக குறிப்பிட்ட நபருக்கு வழங்குவதே நியாயம் என்ற அடிப்படையில் செய்திகள் தினமும் சமூக ஊடகங்களில் குவிகின்றன.
இவற்றை பார்க்கும் போது “பாபா” திரைப்படக் காட்சி ஒன்று நினைவிற்கு வருகிறது. அந்த திரைப்படத்தில் ரஜினிக்கு இருக்கும் ஆறு மந்திரங்கள் தொடர்பில் கவுண்டமணி ரஜினியை நோக்கி பேசும் ஒரு வசனம் இப்படி இருக்கும். “பாபா... அந்த மந்திரத்தை பயன்படுத்தி என்னை சி எம் (முதலமைச்சர்) ஆக்கி விடலாமே...” என்று கூறும் போது அதற்கு ரஜினி “சி எம் பதவி என்றால் அவ்வளவு இளக்காரமாகப் போச்சா உங்களுக்கெல்லாம்...” என்று கவுண்டமணிக்கு பதிலளிப்பது இந்த கே.என்.சொக்சி தேசிய பட்டியல் விவகாரத்திற்கும் பொருத்தம் போலத்தான் தெரிகிறது.
அந்த அளவிற்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் முஸ்லிம் அரசியலில் மலிவாகிப் போன ஒரு நிலைமையை கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம்.
மேற்குறித்த நிலைமைக்கு தற்போது உள்ள தலைமைகளை மட்டும் குற்றம் சுமத்துவது அர்த்தமற்றதாகும். காரணம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம் எச் எம் அஷ்ரப் கட்சி ஆரம்பித்து நடந்து முடிந்த தேர்தல்களின் போதும் அவர் வழங்கிய தேசிய பட்டியல்கள் இந்த நேரத்தில் நினைவூட்டப்படுவதும் பொருத்தமாகும். பிரபல வர்த்தகர் என் எம் புகாரிதீன் அதேபோன்று அசித்த பெரேரா, ரவூப் ஹக்கீம் மற்றும் எம் எம் சுஹைர் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டதும் கூட அப்பொழுது கட்சிக்குள் ஒரு முணுமுணுப்புடன் பேசு பொருளாக இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இருந்த போதிலும் அஷ்ரப் வழங்கிய தேசிய பட்டியலுக்குரிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் ஒரு தனித் திறமையை கொண்டிருந்தார்கள் அல்லது கட்சிக்கு அவர்களால் பொருளாதார ரீதியாக கூட ஒரு நன்மை இருந்தது. கட்சியை முன் கொண்டு செல்வதில் அதிக நிதி நெருக்கடி அப்போது இருந்தமை முக்கியமான ஒரு குறைபாடாக இருந்தது.
தேசிய பட்டியல் என்பது 1977 ஆம் ஆண்டில் அதிகாரத்திற்கு வந்த அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன கொண்டு வந்த புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் முக்கிய ஒரு விடயமாகும். சமூகத்தில் கற்றறிந்த புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், நாட்டுக்கு அவர்களின் பங்களிப்பு அவசியம் என்ற போதிலும் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்ல முடியாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனும் நோக்கில் தேசிய பட்டியல் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஒரு கட்சிக்கு நாடு முழுவதும் கிடைக்கும் மொத்த வாக்குகளின் விகிதாசாரத்திற்கு அமைவாக அந்த கட்சிக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படுகிறது.
தேசிய பட்டியல் விவகாரத்தில் அன்றைய அநேகமான தெரிவுகள் உண்மையாகவே அதன் நோக்கத்தை நிறைவு செய்தன எனலாம். அப்போது அரசியல் அமைப்பு சட்டமேதையாக விளங்கிய பிரபல சட்டத்தரணி கே.என்.சொக்சி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக இருந்த சட்டத்தரணி லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை பீடாதிபதியாக பணியாற்றிய சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்றவர்களை உதாரணத்துக்கு இங்கு குறிப்பிடலாம்.
இவர்கள் இந்த தேசிய பட்டியலுக்கு சிகரமாய் விளங்கி அரசியலில் பெரும் பங்களிப்பை இந்த நாட்டுக்கும் அவர்களை கொண்டு வந்த கட்சிகளுக்கும் வழங்கினார்கள் என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை.
இன்று நிலைமையை சற்று நோக்கினால் இன்றைய அரசியல் கட்சிகள் வழங்கக்கூடிய தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்பவர்களின் தரத்தையும் தகுதியையும் அவர்களின் மொழியாற்றலையும் அரசியல் ஆளுமையையும் அவர்களின் பாராளுமன்ற உரைகளில் இருந்தே எவரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். சிலர் கவிதை வாசிக்கிறார்கள்.
இன்னும் சிலர் பாடல்கள் இசைக்கின்றார்கள். தமக்கு பொருத்தமே இல்லாத விடயங்களில் சிலர் மூக்கை நுழைத்து சிறுமைப் பட்டும் போகிறார்கள். சிலர் பேச எழுந்தால் மற்றவர்கள் ஒரு காமடியனை பார்ப்பது போல பார்க்கின்றார்கள். இன்னும் சில உறுப்பினர்கள் தமது சொந்த ஊர்களில் இடம்பெறும் சில்லறை பிரச்சினைகளையும், பிரதேச சபையில் இடம் பெறும் முரண்பாடுகளையும் கல்வி அலுவலகங்களில் உள்ள இடமாற்றம் போன்ற அற்ப விடயங்களையும் குறித்த இடங்களில் கையாளத் தெரியாமல் அல்லது முடியாமல் அவற்றை அள்ளிக்கொண்டு வந்து பாராளுமன்றத்தில் பேசுவது அவர்களின் அறிவு மட்டத்தையே அப்பட்டமாக காட்டுகிறது.
பாராளுமன்றம் எத்தகைய உயரிய சபை என்பதை விளங்காமல் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது தான் வேடிக்கை ஆகும். இத்தனைக்கும் இவர்களில் சிலர் துறை சார் நிபுணர்களாம். இவர்களை பெரும் பிம்பங்கள் என்று கனவு கண்டிருந்த மக்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அல்லது பன்னிரெண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஊருக்கும் கிராமத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும் உணவுப் பண்டம் போன்று இந்த தேசிய பட்டியலை இரண்டு முஸ்லிம் கட்சிகளும் மாற்றி அமைத்துள்ளன. தமக்கு வேண்டியவர்களை, பணம் படைத்தவர்களை தமது உறவினர்களை, உடன் பிறப்புகளை, மீண்டும் மீண்டும் தமது மாவட்டங்களில் தொடர் தோல்விகள் கண்டவர்களை, தேசிய பட்டியலை பெற்றுக்கொண்டு அதே சபைக்குள் இன்னுமொரு கட்சிக்குத் தாவி பாரிய துரோகம் செய்தவர்கள் போன்றவர்களை இந்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்ததன் மூலம் மக்களின் அமானிதம் கடந்த காலங்களில் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது என்பது வரலாறு.
அது மட்டுமன்றி பொதுத் தேர்தல் காலத்தில் தமது கட்சிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் சிலரின் அரசியல் பின்னணி மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கு மற்றும் அவர்களின் ஆளுமை அந்தஸ்து தொடர்பில் எது வித முன்னுரிமையும் வழங்கப்படாமல் பண பலமும் சொந்த பந்த உறவுமே பிரதானமாக பார்க்கப்பட்டு களத்தில் அவர்கள் இறக்கப்பட்டார்கள். அதன் பிரதிபலிப்பே குறித்த கட்சிகளின் பெரும் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை நாடே அறிந்து கொண்டது.
எந்த விதத்திலும் ஒரு பிரதேச சபைக்கு கூட தகுதியற்றவர்கள் இன்று இந்த நாட்டின் அதி உயர் சபையான பாராளுமன்றத்தின் ஆசனங்களை சூடாக்கிக் கொண்டிருப்பது உலக முடிவு நெருங்குவதற்கான காலத்தின் அடையாளமோ என்று தான் எண்ணத் தோணுகிறது.
குறிப்பாக கட்சிகளின் தலைமைகள் மக்களின் அமானிதத்தை அல்லாஹ்வின் பால் பயந்து கொள்ளுங்கள். கட்சிகள் என்பது எவரது வீட்டுச் சொத்தோ அல்லது தனிப்பட்ட அதிகார எல்லையோ கிடையாது. இவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் மக்கள் உங்களை கேள்வி கேட்காது போனாலும் கூட நாளை மஹ்ஸர் எனும் தீர்ப்பு நாளில் அதன் அதிபதிக்கு முன்னால் நீங்கள் பதில் கூறாமல் நகரவே முடியாது.....
உமர்லெப்பை யாக்கூப்
ஒலி – ஒளிபரப்பாளர்,
சிரேஷ்ட ஊடகவியலாளர்.
30 ஆகஸ்ட் 2026.
