கிளிநொச்சியில் அமெரிக்க அதிகாரியின் கள விஜயம்: கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு பார்வையிடல்
கிளிநொச்சியில் அமெரிக்க அதிகாரியின் கள விஜயம்: கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு பார்வையிடல்
அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி நேரில் பார்வையிட்டார்.
அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் 'டேஷ்' (DASH) மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் இப்பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் செயற்பாடுகளைப் பார்வையிடும் நோக்கில், அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல்-இராணுவ விவகாரங்கள் பணியகத்தின், ஆயுத அகற்றல் மற்றும் குறைத்தல் அலுவலக திட்ட முகாமையாளர் கீத் டி. கிளார்க் (Keith D. Clark) இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அரசர்கேணி பகுதியில் DASH நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிட்டார். அத்துடன், இப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து விளக்கங்களைப் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, பளை மத்திய கல்லூரி (Pallai Central College) மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெடிபொருள் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கிலும் அவர் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், பாடசாலையின் பயன்பாட்டிற்காக 30 நாற்காலிகளையும் அன்பளிப்பாக வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் DASH நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
