" உடலில் ஆடைகள் இன்றி கோவில் குளத்தில் பாய்ந்த பொறியியலாளர்
" உடலில் ஆடைகள் இன்றி கோவில் குளத்தில் பாய்ந்த பொறியியலாளர்"
இந்தியாவின் ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளரான இளம்பெண் ஒருவர் ஆடைகளின்றி கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான தேஜஸ்வினி, மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார். பெங்களூருவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த அவர், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு விலகியிருந்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் சட்டப்பூர்வமாக பிரிந்ததைத் தொடர்ந்து, கடுமையான மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களாக ஹைதராபாத்தின் பீர்சாதிகுடா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு உணவுக்குப் பிறகு இருவரும் உறங்கச் சென்றனர்.
அதிகாலை சுமார் 2.30 மணியளவில் விழித்த தேஜஸ்வினி, தாய் இருந்த அறையை வெளிப்புறமாக பூட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளில், அவர் ஒரு சேலையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு, ஆடையின்றி சாலையில் நடந்து சென்றது பதிவாகியுள்ளது. பின்னர் அருகிலிருந்த கோவிலுக்கு சென்று சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்ததுடன், அங்கிருந்த அம்மன் சிலையை தொட்டுவிட்டு, அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவில் குளத்திற்குள் ஓடிச் சென்று குதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடுத்த நாள் காலை விழித்த தாய், தாம் அறைக்குள் பூட்டப்பட்டிருப்பதை அறிந்து சத்தமிட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து கதவைத் திறந்தனர். அதன் பிறகு மகளைத் தேடியபோது, கோவில் குளத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது.
மேடிப்பள்ளி பொலீசாரும், டிஆர்எப் (DRF) மீட்புக் குழுவினரும் இணைந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தனது மகளுக்கு அடிக்கடி பயங்கரமான கனவுகள் வந்ததாகவும், அவ்வப்போது பதற்றமாக நடந்து கொண்டதாகவும் தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து பொலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
