Breaking News

வடமராட்சியில் காணாமல் போன மீனவர்கள் விவகாரம்.. விசேட அனுமதியுடன் இந்தியா எல்லையில் தேடுதல்... சாதகமான முடிவு இல்லை நீரியல் வளத் திணைக்களம் தெரிவிப்பு.

 வடமராட்சியில் காணாமல் போன மீனவர்கள் விவகாரம்.. விசேட அனுமதியுடன் இந்தியா எல்லையில் தேடுதல்... சாதகமான முடிவு இல்லை நீரியல் வளத் திணைக்களம் தெரிவிப்பு.



வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன் இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவு கிடைக்கவில்லை என யாழ் மாவட்ட கடத்தொழில் நீரியல் வளத் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.


வடமராட்சியில் காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர் கடற்படையினருக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கியிருந்தார். 


அதன் அடிப்படையில் குறித்த பகுதி மீனவர்களின் ஒத்துழைப்புடன் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி இரு நாட்களாக இடம்பெற்று வருகிறது. 


தற்போது கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் தேடுதல் நடவடிக்கைகள் தடைப்படாமல் பாதுகாப்பாக உரிய அறிவுறுத்தலின் பிரகாரம் இடம்பெற்று வருகிறது.


காணாமல் போன மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதிக்குள் திசை மாறி சென்று இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் விசேட அனுமதி பெற்று மீனவ படகுகள் குறித்த பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நேற்று மாலை கரை திரும்பியிருக்கின்றன. 


இந்தியா எல்லைக் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான படகுகள் தென்படாத நிலையில் தொடர்ந்தும் குறித்த மீனவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்