ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல்: GMOA எடுத்த தீர்மானம்..!
ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடல்: GMOA எடுத்த தீர்மானம்..!
ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர நிறைவேற்று மற்றும் மத்திய குழுவைக் கூட்டவுள்ளதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தியதாகவும், அந்த யோசனைகள் குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடப்படும் என்றும், அந்த யோசனைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்துவதாக தமது சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார்.
"நாங்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தோம். இந்த வரவு செலவுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திலும் சுகாதார அமைப்பை நிலைநிறுத்துவதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் நாங்கள் முன்வைத்த யோசனைகளில், விசேடமாக வைத்தியர்கள், விசேட வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்வதற்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இந்த யோசனைகள் தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும், ஆக்கபூர்வமான தீர்வுகளை வழங்கும் வாய்ப்பு குறித்து ஆராயவும் அவர் இணக்கம் தெரிவித்தார்...
இன்று நாங்கள் அவசர நிறைவேற்றுக் குழுவைக் கூட்டவுள்ளோம். எதிர்காலத்தில் அவசர மத்திய குழு கூட உள்ளது. அவசர நிறைவேற்றுக் குழு மற்றும் அவசர மத்திய குழுவில் இது தொடர்பாகக் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்."
