போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை..!
போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவ சுற்றறிக்கை..!
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கு சுற்றறிக்கை வெளியிடப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (16) களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், நாளையே (17) கல்விச் செயலாளர் ஊடாக அந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படும் எனக் கூறினார்.
அதன்படி, அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைப்பதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாகச் செயலாளர் ஊடாக நாளை வெளியிடப்படவுள்ளன.
அரசு சாரா நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை நிறுவுவதற்காக ஜனாதிபதிச் செயலாளர் ஊடாக சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய நடவடிக்கைக்கு இணங்க, அரச நிறுவனங்களில் தேசிய நடவடிக்கைக் குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு இணையாக இது மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், 1818 என்ற அழைப்பு இலக்கத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் தேசிய சபைக்கான அலுவலகம் எதிர்வரும் 22ஆம் திகதி டொரின்டனில் (Torrington) திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால,
"இந்தப் பிரச்சினை மிகவும் பாரதூரமான நிலையை அடைந்துள்ளது. இது சமூகத்திற்கு ஒரு பேரழிவைக் கொண்டுவருகிறது. இந்தப் பிரச்சினையைச் சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கருதுகிறோம்" என்று கூறினார்.
