அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது..!
அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது..!
நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை
நமது நாட்டில் வாழும் 37 இலட்சம் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் அஸ்வெசும திட்டம் மக்களுக்கு பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் சமுர்த்தி அமைச்சுக்கும், உலக வங்கி பணிப்பாளருக்கும் மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது நாட்டில் இதுவரை அபிவிருத்தி திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எல்லாம் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்களின் ஆலோசனைகளைப் பெற்றே முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அஸ்வெசும திட்டத்தின் பயனாளர்களின் தகவல்களை பெறுவதற்காக திடீர் என இளைஞர் குழு ஒன்றை நியமனம் செய்து அஸ்வெசும திட்டத்தில் ஒரு வீட்டின் தகவல்களை தருபவருக்கு ரூபா 300 கொடுப்பனவு வழங்கப்பட்டு பெறப்பட்ட தகவல்களினால் அம்பாறை மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக்கோட்டின் வாழும் 550 மக்கள் அஸ்வெசும திட்டத்தில் தங்களை இணைக்குமாறு பிரதேச செயலாளருக்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.
எனவே, அஸ்வெசும திட்டம் தொடர்பான வழிகாட்டல்களை மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கி அது தொடர்பான விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்து அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ள மக்களை அஸ்வெசும திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு கூட்டம் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் 22.10.2025ல் நடைபெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
நமது நாட்டின் ஒரு பிரஜை பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவரின் வருமானம், செயற்பாடுகள் எல்லாவற்றையும் கிராம சேவகர் பிரிவு ரீதியாக கிராம சேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அறிந்திருக்கின்றனர். வழமைக்கு மாறாக அஸ்வெசும திட்ட பயனாளிகளை தெரிவு செய்வதற்கு திடீரென இளைஞர் குழுவினை நியமித்ததினால் சரியான தகவல்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை அஸ்வெசும திட்டத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மேல்முறையீடு கடிதங்களை கொடுத்துள்ளனர். எனவே, அஸ்வெசும திட்டத்தின் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு ஏழை மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் அஸ்வெசும திட்ட பயனாளிகளுக்கு பணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த திட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழும் சிறிய கிராமங்களில் அஸ்வெசும திட்டப் பயனாளிகள் எல்லோரையும் ஒன்றிணைத்து தொடர்ந்தும் அவர்களின் வாழ்வாதாரம் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த உலக வங்கி திட்டமிடல் பணிப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதாகவும், விரைவில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களையும் அழைத்து அஸ்வெசும திட்டம் தொடர்பான வழிகாட்டல்கள், பயிற்சி பட்டறைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
