Breaking News

சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மூன்று நூல்கள் வெளியீடும்

கிருசாந்

செய்தியாளர் 


சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மூன்று நூல்கள் வெளியீடும்



சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு விழா அதன் நிறுவனர் கோகிலா மகேந்திரன் தலைமையில் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் ஆரம்பமானது.


விருந்தினர்கள் வரவேற்பு நடனத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தமிழ்வாழ்த்து பாடப்பட்டது. பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து தலைமையுரையியினை சி. சிவராஜன் அவர்கள் நிகழ்த்தினார்.


ஞாயிறு தோறும் கடந்த ஆறு மாதங்களாக இடம்பெற்ற "ஆளுமை" வகுப்பில் சித்தி பெற்றவர்களுக்கான பயிற்சி சான்றிதழ்களும், பரிசுகளும் கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.  


கோகிலா மகேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட மூன்று நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

 

முதலாவதாக தேன்குயில் மலரின் வெளியீட்டுரையினை பேராசிரியர் சி.ரகுராம் அவர்கள் நிகழ்த்தினார். குறித்த மலரினை பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்கள் வெளியிட வண பிதா செ. அன்புராசா அவர்கள் பெற்றுக் கொண்டார்.


தொடர்ந்து "முடிவைத்தொடுவாய் முயன்று" என்ற சமூக, உளவியல் கல்வியியல் நூலுக்கான வெளியீட்டுரையினை வைத்தியர் சி. சிவகலை (ராதா) அவர்கள் நிகழ்த்தினார். இந்நூலின் முதற்பிரதியை கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் வெளியிட உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அபிராமி ராஜ்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


தொடர்ந்து "மன நாடக மேடையில்" நாடக அனுபவ நூலின் வெளியீட்டுரையினை விரிவுரையாளர் இ. இராஜேஸ்கண்ணன் அவர்கள் நிகழ்த்தினார். குறித்த நூலினை பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்கள் வெளியிட பேராசிரியர் க. சிறீகணேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


அதனைத் தொடர்ந்து மூன்று நூல்களினதும் மதிப்பீட்டுரைகளினை தமயந்தி கணேசானந்தன், சிவானந்தி பாஸ்கரன், புஷ்பராணி இளையதம்பி ஆகியோர் வழங்கினார்கள்.


தொடர்ந்து சிறுகதை நாடக நிகழ்வுகள் சோலைக்குயில் உறுப்பினர்களால் அரங்கேற்றப்பட்டதனை தொடர்ந்து மதிய போசனத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.


இந்நிகழ்வில் சோலைக்குயில் அங்கத்தவர்கள், கல்வியலாளர்கள், மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.