வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா..!
வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா..!
யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன் தலமையில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதியில் மிகச் சிறப்பாக இன்று பிற்பகல் 2:45 மணியளவில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஆலய முன்றலிலிருந்து அழைத்துவரப்பட அதனை தொடர்ந்து பறை முழங்க காவடி, கரகம், புலியாட்டம் உட்பட பல பண்பாட்டு நிகழ்வுகள் அணிவகுத்து வந்தது. அதனை தொடர்ந்து மங்கல சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் மண்டபத்தில் ஆரம்பமானது. மங்கல சுடர்களை யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிதீபன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலரும் நிகழ்வின் தலைவருமான நடராசா திருலிங்கநாதன், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வினசன்டிபோல் டக்ளஸ்போல், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் கலைஞர்கள் உட்பட பலரும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து, உடுக்கிசையுடன் இறையிசை பாடல்களும்,
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கலைஞர்களின் கிராமிய இசை பாடல்கள், நடனம், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இதேவேளை வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான விருதுகளை நிகழ்வின் பிரதம விருந்தினர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் வழங்கிவைத்தனர்.
கலைப்பரிதி விருதினை இசைத்துறையில் கு.ரவீந்திரன் அவர்களும், நாடகத்திற்கான கலைப்பரிதி விருதினை தெ.முரளிதரன் அவர்களும், தற்காப்பு கலை மற்றும் யோகவிற்க்கான கலைப்பரிதி விருதினை திருமதி கு.மாலதி அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
இளங்கலைப்பருதி விருதினை ஓவியத்திற்காக து.ஜெயதீபன் அவர்களும், இளங்கலைப்பருதி விருதுகளை ஓவியத்திற்காக சி.வினோபா அவர்களும், நடனத்திற்க்காக திருமதி.ந.கார்த்திகா அவர்களிற்கும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கலைஞர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து
கொண்டனர்.
