கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்..!
கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்..!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் 2025 ம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் நேற்று(20.08.2025) நடைபெற்றது.
குறித்த கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் :
கடந்த கால கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டங்களில் வெளிவந்த விடயங்களில் 75வீதமானவற்றை முடிவுறுத்தியுள்ளோம். அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் தீர்க்கப்படாதுள்ள விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தி சுற்று நிரூபங்களின் உதவியுடன் கணக்காய்வு முகாமைத்துவ குழுவின் இணைஉறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இவ்வாண்டுக்குள் திணைக்கள மட்டத்திலான அனைத்து பிரச்சினைகளையும் முடிவுறுத்த கூடிய கவனம் எடுக்கவேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதன்போது, மாவட்ட செயலகம் உட்பட பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அரச திணைக்களங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்பான பலவிடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு ஐயவினாக்கள் தொடர்பாகவும் திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும் கடந்த கால கூட்ட அறிக்கை, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் என்.குமுதினி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் T.பிரபாகரன், உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் என்.பொன்ராணி, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கிளிநொச்சி மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர் V.மோகனதாஸ், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட பொறியியலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளகக் கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.