Breaking News

மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது - ஆளுநர் தெரிவிப்பு!

 மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என அவர்கள் நம்புவதன் காரணமாக சுதேச மருத்துவத்தை தேடிச் செல்கின்றனர். இந்த மாற்றத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 



கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.


வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் தி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் அவர்கள் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


ஆளுநர் தனது உரையில், திணைக்களங்களுக்கு சிறப்பான பௌதீக வளம் இருந்தால் மக்களுக்குத் தேவையான சேவையை வழங்க முடியும். நாங்கள் அரச சேவைக்கு இணைந்து கொண்ட 1991ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையிலான காலம் போருடனேயே இருந்தது. அந்தக் காலப் பகுதியில் பௌதீக வளங்கள் சிறப்பாக இல்லாவிட்டாலும் மக்களுக்கு திருப்திகரமான சேவையை நாம் வழங்கியிருந்தோம். 


எங்களுடைய சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு மிகப் பெரிய கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெற்றன. ஆனால் மனித வளம் இல்லாமையால் அவை இயங்காமல் இருக்கின்றன. 


இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பௌதீக வளங்கள் இருந்தாலும் மக்களுக்கு தரமான – சிறப்பானதொரு சேவையை வழங்கினாலேயே அந்தத் திணைக்களங்களை நோக்கி மக்கள் வருவார்கள். மக்கள் எவ்வளவு விரும்பி திணைக்களங்களை நோக்கிச் செல்கின்றார்களோ அதில்தான் அந்தத் திணைக்களங்களின் வெற்றி தங்கியிருக்கின்றது. திணைக்களங்களும் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கினால்தான், அந்தத் திணைக்களங்களுக்கு மேலதிக உதவிகளைச் செய்யவேண்டும் என்ற உந்துததல் எங்களுக்கும் ஏற்படும். எனவே மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதுடன், நகரின் மத்தியில் திறக்கப்பட்டமையால் சித்த மருந்தகத்தை நோக்கி மக்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நினைவிலிருத்தி செயற்படவேண்டும், என்றார்.


வடக்கு மாகாண ஆளுநரால் வளாகச் சுற்றாடலில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.