சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றும் சிறைக்கு மாற்றப்பட்ட அனோஜன்"
"சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றும் சிறைக்கு மாற்றப்பட்ட அனோஜன்"
சவுதி அரேபியாவில் மரண தண்ட
னை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், மரண தண்டனை விதிக்கப்படும் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டு இருப்பதாக அவரது சகோதரர் சிவராசா ஹம்சிதன் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனோஜனுக்கு அந்த நாட்டு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட நாள் முதல் தனது சகோதரனுடன் தொலைபேசியூடாக உரையாட முடிந்ததாகக் கூறிய அவரது சகோதரன், கடந்த சில தினங்களாக அவருடன் தொடர்புகொள்ள முடியாது இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இருப்பினும், அனோஜன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தன்னுடன் தொடர்புகொண்டதாகவும் அவர் கூறினார்.
இரண்டு நாட்களாக தொலைபேசி எடுக்கவில்லை. முந்தைய நாள் இரவு அவரை அழைத்துச் சென்றுள்ளார்கள். அவர் நேற்று முன்தினம்தான் அழைத்தார். மரண தண்டனை கொடுக்கப்படும் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்களாம்.
இந்தச் சிறைச்சாலையில் தொலைபேசி வசதிகள் இல்லையாம். அதனால், தொலைபேசியூடாகக் கதைக்க முடியாது என்றார். எல்லோருக்கும் இந்த விஷயத்தை கூறுமாறும் சொன்னார்.
அரசு செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்யுமாறு சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்" என அவரது சகோதரன் சிவராசா ஹம்சிதன் தெரிவித்தார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழகத்தில், 27 வயதான அனோஜன் பட்டப் படிப்பை நிறைவு செய்து, அதனுடன் தொடர்புடைய வேலைக்காகக் கடந்த ஆண்டு சௌதி அரேபியா நோக்கிச் சென்றிருந்தார்.
''அண்ணாவை நாட்டிற்கு அழைத்து வந்தால் மாத்திரமே போதுமானது. இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செய்து தரவேண்டும்," என சிவராசா ஹம்சிதன் கோரிக்கை விடுக்கிறார்.
இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திற்கு, நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து குழுவொன்று பாத யாத்திரை சென்றிருந்தது. இந்தப் பாத யாத்திரை குழுவுடன், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள்.
கல்முனை பகுதி ஊடாக பாத யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாயின் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடாத்துவது போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து அது நாட்டில் பாரிய பேசுபொருளானது.
இந்த நிலையில், குறித்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
நாய் மீது தான் அறியாமல் தாக்குதல் நடாத்தியதாகத் தெரிவித்த இளைஞர், பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பிலான விவாதம் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பேசுபொருளாகி, பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டன.
இந்நிலையில், சிவலிங்கம் தொடர்பாகப் பதிவிடப்பட்ட பதிவொன்றில் இஸ்லாமிய நபர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்குப் பதிலளிக்கும் வகையில், அனோஜன் நபிகள் நாயகம் தொடர்பான பதிவொன்றை வெளியிட்டு, பிறகு குறுகிய நேரத்தில் அந்தப் பதிவை நீக்கியிருந்தார்.
அவ்வாறு அனோஜன் வெளியிட்ட கருத்தை ஸ்கிரீன் ஷோட் எடுத்த சிலர், அதைப் பகிர்ந்து, மீண்டும் பேசுபொருளாக்கியிருந்தனர். அனோஜன் வெளியிட்ட பதிவு பின்னரான சந்தர்ப்பங்களில் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பகிரப்பட்ட நிலையில், அந்த விஷயம் சவுதியில் முறைப்பாடு செய்யும் அளவுக்குப் பெரிதானது.
இவ்வாறான நிலையில், சமூக ஊடகங்களில் வீடியோவொன்றை வெளியிட்ட அனோஜன், தான் செய்ய தவறுக்குப் பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியிருந்தார்.
இதையடுத்து, சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன், இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த நாட்டு பொலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அனோஜன், சவுதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் தண்டப் பணமும் விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இவ்வாறு அனோஜனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அடுத்து, அவரது பெற்றோர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக, சௌதி அரேபியாவில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி, சவுதியில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த நிலையில், அனோஜனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு அடங்கிய ஆவணங்கள், அந்த நாட்டு நீதிமன்றத்தால் சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்திற்குக் கையளிக்கப்பட்டு, அந்த ஆவணம் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கும் நிலைமையை ஏற்படுத்தக் காரணமாக கல்முனை பகுதியில் நாயைத் தாக்கிய சம்பவம் அமைந்திருந்தது.
அந்த நாயைத் தாக்கிய நபர், இலங்கையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் செல்ல முதலில் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 7ஆம் தேதி கல்முனை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் சந்தேக நபராகக் காணப்பட்ட நபர், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவருக்கான தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 100 ரூபா அபராதமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட மூன்று மாத சிறைத் தண்டனையையும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
தொடர்ந்தும் இறைவனிடம் மன்றாடுவோமாக.
