காங்கேசன்துறையில் செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளையால் 2வது தடவையாகவும் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம்!
காங்கேசன்துறையில் செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் கிளையால் 2வது தடவையாகவும் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம்!
காங்கேசன்துறை:
"பிளாஸ்டிக் இல்லா பசுமையான எதிர்காலம் நம்மால் சாத்தியம்" எனும் தொனிப்பொருளில், காங்கேசன்துறை பகுதியில் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணிச் செயற்றிட்டம் இன்று (18) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு - காங்கேசன்துறை பகுதியில் தொடர்ச்சியாக 2வது தடவையாகவும் இச் செயற்றிட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதையும், தூய்மையான சூழலை உருவாக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இச் செயற்றிட்டம் அமைந்திருந்தது.
இத் தூய்மையாக்கல் பணியின் போது அப்பகுதியில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பிலும், சூழலைப் பேணிப் பாதுகாப்பது குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விரிவான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இச் செயற்றிட்டத்தினை ‘விதையனைத்தும் விருட்சமே’ அமைப்பு, வலிகாமம் வடக்கு பிரதேச சபை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் சாரணர் இயக்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கூட்டாக முன்னெடுத்திருந்தனர்.
சமூகப் பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கப்பட்ட இப் பசுமைச் செயற்றிட்டத்திற்கு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளன.
