தேசிய ரீதியில் இளம் பிராந்திய ஊடகவியலாளராக மொஹமட் சித்திக் ஹரிஸ் தெரிவு
தேசிய ரீதியில் இளம் பிராந்திய ஊடகவியலாளராக மொஹமட் சித்திக் ஹரிஸ் தெரிவு
நல்லதொரு ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான பயிற்சித் திட்டத்திற்கு தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக அநுராதபுரம் மாவட்டம் இக்கிரிகொள்ளாவையைச் சேர்ந்த மொஹமட் சித்திக் ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதுமுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டதன் பின்னர் தகுதியான 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஊடகம், செய்தி, சமூக விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் ஊடகத் துறைகளில் தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் மொஹமட் சித்திக் ஹரிஸ், ஊடகத் துறையில் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
இவர் IDH Tamil Media நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமாக செயற்பட்டு வருவதுடன், ஊடகவியலாளர் மற்றும் ஊடகத் துறை சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்பயிற்சித் திட்டத்தின் மூலம் இளம் ஊடகவியலாளர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பானதும் தரமானதுமான ஊடகப் பணியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.
இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் புகைப்படக்கலை, காணொளி தயாரிப்பு, அறிவிப்பாளர் பயிற்சி, பத்திரிகைத்துறை, அபிவிருத்தித் தொடர்பாடல், டிஜிட்டல் ஊடகம் மற்றும் புதிய ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்றதுடன், இளைஞர் விவகார பிரதி அமைச்சர், வெகு சன ஊடக பிரதி அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தேசிய ரீதியில் இளம் பிராந்திய ஊடகவியலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள மொஹமட் சித்திக் ஹரிஸுக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
