மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை; இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை; இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத்தை தற்போதைய நிலையில் மாற்றமின்றி தொடர இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.
மின்சார உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், மின்சார விநியோகச் செலவில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு வெறும் 0.3 சதவீதமாகவும், 417 மில்லியன் ரூபாயாகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், கட்டணத் திருத்தம் தேவையில்லை என PUCSL தெரிவித்துள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறையே மூன்றாம் காலாண்டிலும் தொடரும்.
தேசிய முறைமை இயக்குநர் நிறுவனம் சமர்ப்பித்த செலவு மதிப்பீடுகளை ஆய்வு செய்த பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக PUCSL தெரிவித்துள்ளது.
முதல் காலாண்டில் கிடைத்த 30,118 மில்லியன் ரூபாய் வருவாய் உபரி அடுத்த காலாண்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது 26,753 மில்லியன் ரூபாய் மீதமாக உள்ளது.
இதனுடன் மூன்றாம் காலாண்டுக்கான மின்சார விநியோகச் செலவாக மதிப்பிடப்பட்டுள்ள 159,274 மில்லியன் ரூபாயை சேர்த்தால், மொத்தச் செலவு 186,027 மில்லியன் ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மின்சாரக் கட்டணங்களின் அடிப்படையில் இந்தக் காலாண்டில் 156,244 மில்லியன் ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டின் 6,943 மில்லியன் ரூபாய் இலாபம், நுகர்வோருக்கான அரசாங்க மானியமாக 9,650 மில்லியன் ரூபாய், தேசிய முறைமை இயக்குநரின் செயற்பாடுகளுக்காக 17,213 மில்லியன் ரூபாய் உள்ளிட்ட மேலதிக வருவாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி, மொத்த வருவாய் 185,610 மில்லியன் ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது.
செலவுக்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசம் 417 மில்லியன் ரூபாய் மட்டுமே என்பதால், 2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என PUCSL இறுதி முடிவை அறிவித்துள்ளது.
