கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர் - அதிபர் கூட்டணி மாபெரும் பேரணி கோரிக்கைகள்~ நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை
*~கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர் - அதிபர் கூட்டணி மாபெரும் பேரணி
கோரிக்கைகள்~ நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணக் கோரி, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் இன்று (ஆகஸ்ட் 04) முற்பகல் 11.00 மணிக்கு இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு முன்னால் மாபெரும் பேரணி மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தின் போது தொழற்சங்கக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
பாடக கூறுகள் (Modules) தொடர்பான சிக்கல்கள்:
ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் புதிய திருத்தங்களுக்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட சுய கற்றல் பாடக் கூறுகளுக்குத் தேவையான பாட உள்ளடக்கங்களும் மாதிரி வினாத்தாள்களும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இதனால் பாடக் கூறுகளை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் மீண்டும் தேர்வுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய அநீதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே பாடக் கூறுகளை முடித்த ஆசிரியர்களைத் தகுதித் தடைகளிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சேவை உறுதிப்படுத்தல்:
நியமனம் பெற்று 3 ஆண்டுகளுக்குள் முதலாவது தகுதித் தடையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும், அமைச்சின் தாமதங்களால் உரிய காலத்தில் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்களின் சேவையை உறுதிப்படுத்த முடியாமலும், அவர்களின் இடமாற்றங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குறித்த காலப்பகுதியை நிறைவு செய்த ஆசிரியர்களின் சேவையை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்.
ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கான விலக்களிப்பு:
கல்வி அமைச்சின் தவறு மற்றும் தாமதங்களால் தகுதித் தடைகளை பூர்த்தி செய்ய முடியாமல், சம்பள ஏற்றம் மற்றும் பதவி உயர்வுகளை இழந்து ஓய்வுபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களையும் தகுதித் தடைகளிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சம்பள முரண்பாடு தீர்க்கப்படல்:
சுமார் 30 வருட காலமாக நிலவி வந்த ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாட்டில் 1/3 பகுதி மட்டுமே கடந்த போராட்டங்களின் மூலம் பெறப்பட்டது. எஞ்சிய 2/3 பகுதி இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலுவையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் பூஜ்ய யல்வெல பஞ்சாசேகர ஹிமி, சுயாதீன கல்விச் சேவை சங்கத்தின் ஜகத் ஆனந்த சில்வா, இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் மோஹான் பராக்கிரம வீரசிங்க, தேசிய ஆசிரியர் சபையின் டீ.டீ. என். பீ. ஜயதிலக, இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் நாலக த சில்வா, இலங்கைத் தாய்மொழி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் அதிபர்களும் இப்போராட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தமது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்காவிட்டால், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாக தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் இதன்போது எச்சரித்தனர்.
இதில்
இப்போராட்டத்தில் இலங்கைத் தாய்மொழி ஆசிரியர் சங்கமும் தீவிரமாகப் பங்கேற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. புயல் நேசன், யாழ் மாவட்டச் செயலாளர் திரு. டினோஷன் மற்றும் வடக்கு மாகாண அதிபர்கள் சார்பாக ஜேசுதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆசிரியர்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர்.
