யாழ் ஆயரால் திறந்து வைக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயம்!
யாழ் ஆயரால் திறந்து வைக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்க செம்பியன் பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயம்!
வரலாற்றுச் சிறப்புமிக்கதும் உலகப் புகழ்பெற்றதுமான வடமராட்சி கிழக்கு, செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் திறப்பு விழாவும் அபிஷேக விழாவும் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 6:45 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.
சிறப்பான வரவேற்பும் ஆலயத் திறப்பும்:
நிகழ்வின் தொடக்கமாக, யாழ் ஆயரைச் செம்பியன் பற்று பங்குத் தந்தையும் பங்கு மக்களும் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். தொடர்ந்து, செம்பியன் பற்று வடக்கு சிறுவர்களின் கண்ணைக் கவரும் வரவேற்பு நடனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, புனிதர் வேடமணிந்த முன்பள்ளிச் சிறுவர், சிறுமியர் ஆயர், அருட்தந்தையர்கள் மற்றும் பங்கு மக்களை அன்போடு வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, யாழ் ஆயரால் ஆலயம் ஆசீர்வதிக்கப்பட்டு முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. பின்னர், யாழ் ஆயரின் தலைமையில் செம்பியன் பற்று பங்குத் தந்தை, செம்பியன் பற்று மண்ணின் மைந்தர்கள் மற்றும் யாழ் மறைமாவட்ட அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியின் போது ஆலயத்தின் ஒவ்வொரு தூண்களும் ஆசீர்வதிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டன.
நினைவு மலர்கள் வெளியீடு:
கூட்டுத் திருப்பலி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, புதிய ஆலயத்திற்கான "திறப்பு விழா நினைவு மலர்" வெளியிடப்பட்டதுடன், அதன் முதற்பிரதிகளைச் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, செம்பியன் பற்று மண்ணின் முதல் குருவான மறைதிரு மணி லொறன்சு அடிகளாரின் 30-வது நினைவு ஆண்டினைச் சிறப்பிக்கும் முகமாக, செம்பியன் பற்று பங்கு மக்களால் "ஊழியன்" எனும் நினைவு மலரும் வெளியிடப்பட்டது.
இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் இலங்கை முழுவதிலும் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் வருகை தந்த திரளான மக்களுடன் நூற்றுக்கணக்கான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
